• July 18, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: கண்களில் ஏதோ காரணத்துக்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், கண்தானம் செய்யலாமா… உதாரணத்துக்கு, லேசர், ரெட்டினா அறுவை சிகிச்சை, கேட்டராக்ட் போன்றவற்றுக்குப் பிறகு கண் தானம் செய்யலாமா…  கண் தானத்துக்கு ஒப்புதல் அளித்த பிறகு கண்களில் பிரச்னை வந்து ஆபரேஷன் செய்ய நேர்ந்தால் கண் தானம் மறுக்கப்படுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

விஜய் ஷங்கர்

கண்களில் செய்யப்படுகிற அறுவை சிகிச்சைக்கும் கண் தானத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் தாராளமாக கண் தானம் செய்யலாம்.

ஒருவர் இறந்ததும் அவரின் உறவினர்கள் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்தால், மருத்துவக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து இரண்டு கருவிழிகளையும் அகற்றிவிட்டு, உள்ளே பஞ்சு வைத்து தைத்துவிட்டுச் செல்வார்கள். அப்படி தானமாகப் பெறப்படும் கண்களை இரண்டு பேர் அல்லது நான்கு பேருக்குப் பயன்படுத்தலாம். இறந்த பிறகு கண்களை தானமாகப் பெறுவது தொடர்பான தவறான புரிதல் பலருக்கும் இருக்கிறது.  

இறந்தவரின் கண்களை தானமாக எடுக்கும்போது மொத்த கண்களையும் அகற்ற மாட்டோம். கருவிழிகளை மட்டும்தான் அகற்றுவோம்.

இறந்தவரின் கண்களை தானமாக எடுக்கும்போது மொத்த கண்களையும் அகற்ற மாட்டோம். கருவிழிகளை மட்டும்தான் அகற்றுவோம். அதை ‘கார்னியல் டிரான்ஸ்பிளான்ட்டேஷன்’ (Corneal transplantation) என்று சொல்வோம்.

கருவிழியை அகற்றிய பிறகான வெள்ளைப் பகுதியை ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒருவேளை ஒரு நபர், மூளைக்காய்ச்சல், எய்ட்ஸ், செப்டிசீமியா (Septicemia)  போன்ற காரணங்களால் இறந்திருந்தால், அவரின் கண்களை தானமாகப் பெற மாட்டோம். மற்றபடி, ஒருவருக்கு கண்களில் வேறெந்தப் பிரச்னை இருந்தாலும் அவரின் கண்களை  தானமாகப் பெறலாம். அதில் சிக்கல் வராது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *