
சென்னை: காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பை காக்கும் வகையில் தான் கருத்துகளை பகிர வேண்டும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
காமராஜர் 123-வது பிறந்தநாள் கடந்த 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றினார். “முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ‘தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு குறித்து மாநிலம் தழுவிய அளவில் காமராஜர் கண்டன கூட்டம் நடத்தினார். அவருக்கு ஏசி இல்லாவிட்டால் உடலில் ஒவ்வாமை ஏற்படும். நம்மை எதிர்த்துதான் அவர் பேசுகிறார். ஆனால், அவரது உடல்நலம் கருதி அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய சொன்னதாக கருணாநிதி கூறினார்” என்று சிவா தனது பேச்சில் குறிப்பிட்டார்.