
மும்பை: மும்பையில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு அமெரிக்காவில் உறவினர்கள் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு உறவினர்களுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஒரு சில மாதங்களிலேயே இவர்கள் இந்தியா அழைத்து வந்து விட்டனர்.
இந்நிலையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற அந்த குழந்தையை தாங்கள் தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என மும்பை தம்பதி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மொஹிதி தேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பில் கூறியதாவது: சிறார் நீதி மற்றும் தத்தெடுத்தல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், இந்த குழந்தை தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய சூழலிலோ அல்லது சட்ட சிக்கலிலோ இல்லை. உறவினர்களின் குழந்தையாக இருந்தாலும், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை தத்தெடுக்க இங்குள்ள சட்டத்தில் இடம் இல்லை. அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க மனுதாரர்களுக்கு அடிப்படை உரிமை இல்லை.