
நம்மில் பலருக்கும் A, B, AB, O என நான்கு ரத்த வகைகளும், அவற்றில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இருபிரிவுகளும்பற்றியும் தெரியும். இன்னும் சிலருக்கு பாம்பே ரத்தவகைபற்றியும் தெரிந்திருக்கும். ஆனால், இதுவரை உலகம் முழுக்க 47 வகை ரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. தவிர, ரத்த வகைகள் குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
அந்தவகையில், சில தினங்களுக்கு முன்னால், ஃபிரான்ஸை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு புதிய வகை ரத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பெண்மணி ஃபிரான்ஸில் இருக்கிற குவாடலூப் (Guadeloupe) என்ற தீவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவருடைய ரத்தவகைக்கு ‘குவாட நெகடிவ்’ (Gwada Negative) என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். இவருடைய ரத்தப்பிரிவை 48-வது ரத்தப்பிரிவாக சர்வதேச குருதியேற்றல் அமைப்பு ஏற்றுக்கொண்டது. இந்தத் தகவல்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே…
இதுபோல புதிய வகை ரத்தப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு, மருத்துவ காரணங்களுக்காக திடீரென ரத்தம் தேவைபட்டால் என்ன செய்வது என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் A.R.சாந்தியிடம் கேட்டோம்.
” A, B, AB, O என்கிற ரத்தவகைகள் வேறு, அவற்றை பாசிட்டிவ், நெகட்டிவ் என பிரிக்கும் ஆர்.ஹெச். ஃபேக்டர் ( RH factor) என்பது வேறு. ஒருவருடைய ரத்தத்தில் ஆர்.ஹெச். ஃபேக்டர் இருந்தால், அவர்களின் ரத்தவகையுடன் நெகட்டிவ் சேரும். ரத்தத்தில் ஆர்.ஹெச். ஃபேக்டர் இல்லையென்றால், அவர்களின் ரத்தவகையுடன் பாசிட்டிவ் சேரும். இது அடிப்படை.

ரத்த வகைகளுக்கும், அதன் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பிரிவுக்கும் மருத்துவர்கள் நாங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்றால், ஓர் இயற்கை பேரிடர் அல்லது விபத்து மூலமாக ஒருவருக்கு ரத்த இழப்பு ஏற்பட்டால், நம்முடைய உடம்பு அதிகபட்சமாக 25 சதவிகித ரத்த இழப்பை மட்டுமே தாங்கிக்கொள்ளும். அதற்குமேல் இழப்பு ஏற்பட்டால், உடனடியாக அவருடைய அதே ரத்தவகையை நரம்பு வழியாக செலுத்தினால் மட்டுமே அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியும். இதுதான் அடிப்படை. தவிர, அவருக்கு செலுத்தப்படுகிற ரத்தத்தை தானமாக தந்தவருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; மருத்துவம் குறிப்பிடுகிற சில நோய்கள் அவருக்கு இருக்கக்கூடாது. இந்த அறிவியல் தகவல்கள்தான் தற்போது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.
பெண்களுக்கு ரத்தத்தானத்தின் தேவை ஆண்களைக் காட்டிலும் அதிகம். குறிப்பாக பிரசவத்தின்போது, முன்னெச்சரிக்கையாக அவர்களின் ரத்தப்பிரிவை தயாராக வைத்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் நெகட்டிவ் போன்ற மிகவும் அரிதான ரத்த பிரிவுகளையும் இரண்டிலிருந்து 3 ஆண்டுகள் வரை பதப்படுத்தி சேமித்து வைக்க முடிகிறது. இன்னொரு பக்கம் செயற்கை ரத்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியும் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டுவருகிறது, அந்த ஆராய்ச்சி ஜப்பானில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.
ஒருவேளை அப்படி செய்ய முடிந்தால், இதுபோன்ற அரிதான ரத்த வகைகள் இன்னும்கூட இருப்பது தெரிய வரலாம்.

இந்த நிலையில் உலகிலேயே ஒரேயொரு பெண்மணிக்கு மட்டுமிருக்கும் ரத்தவகை போல, அரிதான ரத்தவகை கொண்டவர்களுக்கு திடீரென ரத்தம் தேவைப்பட்டால் என்ன செய்வதென்கிற கேள்வி பலருடைய மனதிலும் தோன்றும். நாம் ஒருவருக்கொருவர் ரத்த தானம் செய்துகொள்வோம். இவர் விஷயத்தில், முன்னெச்சரிக்கையாக அவருடைய ரத்தத்தை, மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு சரியான இடைவெளியில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இது ஒன்று மட்டுமே இப்போதைக்கு இவர்களை பாதுகாக்கும் ஒரே வழி என்பேன்.
உலகிலுள்ள எல்லோருக்குமே தங்களுடைய ரத்த வகை எதுவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அத்தனை பேருமே பிளட் குரூப் தெரிந்துகொள்ளும் பரிசோதனையை செய்திருக்க முடியாதில்லையா? ஒருவேளை அப்படி செய்ய முடிந்தால், இதுபோன்ற அரிதான ரத்த வகைகள் இன்னும்கூட இருப்பது தெரிய வரலாம். ஒரு பெண்ணிடம் மட்டுமே இப்போது கண்டுபிடித்து இருப்பதால் இது அரிதான ரத்தமாக இருக்கிறது. இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்தால், இதே ரத்த வகை கொண்டவர்களை கண்டுபிடிக்க முடியும். அதற்கும் சாத்தியக்கூறு இருக்கிறது. அதனால், உலகின் அரிதான ரத்த வகை கொண்டவர்கள் அஞ்ச தேவையில்லை” என்கிறார் டாக்டர் சாந்தி.