• July 17, 2025
  • NewsEditor
  • 0

பின்னலாடை நகரத்தில், வடமாநிலத் தொழிலாளர் அதிகம் என்பதால் அவர்களைக் குறிவைத்து சட்டவிரோத குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. அந்தச் சட்டவிரோதத் தொழிலில், ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலரே நேரடியாக இறங்கி விற்பனையில் கொழிக்கிறார்களாம். அந்த வியாபாரப் போட்டியில், புதிதாக மாநகரப் பொறுப்புக்கு வந்த ‘கோல்டு’ பிரமுகருக்கும், வட்டத்திலுள்ள ‘இளைய’ பிரமுகருக்கும் இடையே ஏரியா பிரித்துக்கொள்வதில் தகராறு உச்சமாகியிருக்கிறதாம்.

இதில், மாநகரத் தந்தை முன்பாகவே மோதிக் கொண்டிருக்கின்றனர் இருவரும். ‘கோல்டு’ பிரமுகரை கட்சிப் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் எனத் தலைமைக்கும், மண்டல பொறுப்பானவருக்கும் ‘பெட்டிஷன்’ அனுப்பியிருக்கிறதாம் ‘இளைய’ பிரமுகர் தரப்பு. ‘கோல்டு’ பிரமுகருக்கு எதிராகக் கண்டன போஸ்டர்களும் முளைத்திருப்பதால், பின்னலாடை நகரத்தில் அரசியல் பரபரப்பு எகிறியிருக்கிறது!

காரைக்குடி மாநகராட்சியில், ‘மேயரை நீக்க வேண்டும்’ என ஆளுங்கட்சியின் துணை மேயரே போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், இலைக் கட்சியில் கனத்த மெளனம் நிலவுகிறதாம். “இலைக் கட்சியின் கவுன்சிலர்களை ரொம்பவும் அநாகரிகமாக மேயர் பேசியபோதுகூட, மாவட்ட இலைக் கட்சி நிர்வாகி கண்டிக்கவில்லை. சமூகரீதியாகவும் தொழில்ரீதியாகவும் மேயருடன் அந்த மாவட்ட நிர்வாகி இணக்கமாக இருப்பதால், கனத்த மெளனம் காக்கிறார். கடுப்பான இலைக் கட்சி கவுன்சிலர்கள் சிலர், கோகுல இந்திரா மூலமாகக் கட்சித் தலைமையிடம் விவகாரத்தைக் கொண்டு சென்றனர். கடுப்பான தலைமை, ‘காரைக்குடியில் மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று அறிவித்துவிட்டது. ஆடிப்போன மாவட்ட இலைக் கட்சி நிர்வாகி, வேக வேகமாக ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்கிறார். குச்சியை எடுத்தால்தான் ஆடுவார்கள்போல…’’ என்கிறது இலைக்கட்சி வட்டாரம்!

தலைநகரில், மாவட்டத் தீயணைப்பு அலுவலராகப் பணியாற்றும் ‘உலக’ அதிகாரி, ‘பெரிய வசூல் மன்னன்’ எனத் துறைக்குள்ளேயே பெயரெடுத்தவர். சமீபத்தில், ஒரு என்.ஓ.சி வழங்குவதற்கு அவர் மாமூல் கேட்ட விவகாரம், சர்ச்சை ஆடியோவாக உச்ச அதிகாரியிடம் சிக்கிக்கொண்டுவிட்டதாம். வெகுண்டெழுந்த அந்த உச்ச அதிகாரி, ‘இவரைப்போல யாரெல்லாம் கல்லாகட்டுகிறார்கள் என்கிற பட்டியல் எனக்கு வேண்டும்… அத்தனை பேரையும் பந்தாடுகிறேன்…’ என்று தாண்டவமாடிவிட்டாராம். விசாரித்து அறிக்கையளிக்க ஒரு டீமையும் அமைத்திருக்கிறாராம். இதற்கிடையே ஆடியோ விவகாரத்தில் சிக்கிக்கொண்ட ‘உலக’ அதிகாரியிடம், கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டிருந்த மாவட்டத்தைப் பறித்து, வேறொருவருக்கு ஒதுக்கிவிட்டதாம் தீயணைப்புத்துறைத் தலைமை!

உப்பு மாவட்டத்திலுள்ள சர்ச்சைக்குரிய ஆலை நிர்வாகம், மீண்டும் ஆலையைச் செயல்படவைப்பதற்குக் கடும் பகீரதப் பிரயத்தனம் செய்கிறதாம். ஆலையைச் சுற்றியிருக்கும் கிராம மக்களை ஒருங்கிணைத்து, ‘மீண்டும் ஆலையைத் திறக்க வேண்டும்’ என ஆதரவுப் போராட்டத்தையும் நடத்தவைத்திருக்கிறார்களாம். ‘சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம், தேசியக் கட்சிக்கு பெரும் தொகையை நன்கொடையாக அளித்திருக்கிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகமாக இந்த ஆண்டு நன்கொடை அளித்திருக்கிறது. அதேபோல, ஆலைக்கு எதிரான அமைப்பினர் திடீரென மெளனமானதன் பின்னணியில், பல சந்தேகங்கள் எழுகின்றன. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை எனப் பல்வேறு காரணங்களைக் காட்டி, தங்களுக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டும் பணியை முடுக்கிவிட்டிருக்கிறது ஆலை நிர்வாகம்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இதற்கிடையே, ‘சட்டமன்றத் தேர்தல் முடியும் வரையில் அந்த ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டாம். அரசியல்ரீதியாக நமக்குப் பிரச்னைகள் உருவாகலாம்’ என அந்த தேசிய கட்சியின் நிர்வாகிகள் சிலர் டெல்லிக்கு ‘நோட்’ அனுப்பியிருக்கிறார்களாம்!

சிறைத்துறை உச்சப் பொறுப்பிலிருக்கும் அதிகாரி, வெளிநாட்டுக் கைதிகளுக்கு சலுகைகளை வழங்குவதாக சமீபத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. அதில், வேறொரு விவகாரம் ஒளிந்திருக்கிறதாம். அதாவது, சிறைத்துறைக்குள் நடக்கும் முறைகேடுகளுக்குக் கடிவாளம் போடும்விதமாக, சில நடவடிக்கைகளை எடுத்தாராம் அந்த உச்ச அதிகாரி. அதை எதிர்பார்க்காத சில அதிகாரிகள், தங்களுக்குள் கூட்டணி போட்டுக்கொண்டு, அந்த உச்ச அதிகாரியைப் பணியிட மாற்றம் செய்வதற்குக் காய்நகர்த்தினார்களாம். ‘அந்த டீம்தான், தலைநகருக்கு அருகேயுள்ள ஒரு சிறையில் பணிபுரியும் பெண் காவலரைப் பயன்படுத்தி, உச்ச அதிகாரிக்கு எதிராகப் பேச வைத்திருக்கிறது’ என்கிறது சிறைத்துறை வட்டாரம். இந்தச் சூழலில், வெளிநாட்டுக் கைதி விவகாரம் குறித்து சிறை நிர்வாகத்திடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறதாம் டி.ஜி.பி அலுவலகம்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *