• July 17, 2025
  • NewsEditor
  • 0

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே ஐ.டி.ஐ மாணவன் கல்லால் தாக்கி எரித்துக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி மாலை இளமனூர் கண்மாய்கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் உடல் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு சென்ற சிலைமான் காவல்துறையினர் உடல் கிடந்த இடத்தில் விசாரணை செய்து பின்னர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனை

பின்னர் உடல் கிடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட சீருடையின் காலரில் இருந்த டெய்லர் கடை முகவரிக்கு சென்று விசாரணை நடத்தியபோது, அதே வண்ண சீருடையை 4 பேருக்கு தைத்ததாக டெய்லர் கூற, அந்த தகவலை வைத்து விசாரித்தபோது, அதில் 3 பேர் அவரவர் வீடுகளில் இருப்பதும், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த பிரசன்னா என்ற 17 வயதான ஐடிஐ மாணவர் மட்டும் வீட்டில் இல்லாததும் தெரிய வந்தது.

இதனையடுத்து பிரசன்னாவின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, “கடந்த 15 ஆம் தேதி காலையில் ஐ.டி.ஐ-க்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவன், இரவு வரை வீடு திரும்பவில்லை” என்று தெரிவிக்க, அவர்களை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மீட்கப்பட்ட உடலை காட்டியபோது, கையில் இருந்த 6 விரல்கள் மூலமும், காலணிகளை வைத்தும் அந்த உடல் பிரசன்னாவுடையதுதான் என உறுதி செய்யப்பட்டது.

பின்னர் பிரசன்னாவின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிலைமான் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பிரசன்னாவின் குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் விசாரணையில் ‘பிரசன்னா உள்ளிட்ட 4 பேர் இளமனூர் கண்மாய் பகுதிக்கு சென்றதை பார்த்ததாக கூற, இதனையடுத்து இளமனூரில் பிரசன்னாவின் உடல் கிடந்த பகுதியில் கல் ஒன்று ரத்தக்கறையுடன் இருந்ததை கண்டு பிடித்தனர்.

கண்மாய்கரைக்கு வந்தவர்கள் பிரசன்னாவை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு எரிக்க முயற்சித்திருக்கலாம் என்று முடிவுக்கு வந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ராமர், அபினேஷ் என்ற 18 வயதான இரு ஐ.டி.ஐ மாணவர்கள் சரண் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அதே வயதுடைய தாமோதரன், அசோக்பாண்டியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “மதுரை புதூர் ஐ.டி.ஐ-யில் படித்த சீனியரான ராமரை சக மாணவர் ஒருவர் சமீபத்தில் அடித்துள்ளார். இதற்கு காரணம் ஜூனியரான பிரசன்னாதான் என வன்மம் கொண்டு ராமரும் அவனது நண்பர்களும் கடந்த 14 ஆம் தேதி பிரசன்னாவை இளமனூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து பிரச்சன்னாவை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் பிரசன்னா மன்னிப்பு கேட்டும் விடாமல் கல்லால் தாக்க, அதில் மயங்கி விழுந்த பிரசன்னாவை அங்கு கிடந்த ஓலைகளை போட்டு அரைகுறையாக எரித்துவிட்டு சென்றுள்ளனர், கொலை செய்ததற்கு இது மட்டும்தான் காரணமா இல்லையா என்பது தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கும்போது தெரிய வரும்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *