• July 15, 2025
  • NewsEditor
  • 0

கர்நாடகா மாநிலம், உத்தர கர்நாடகா பகுதியில் உள்ள கொகர்னா வனப்பகுதியில் இருந்த மலைக்குகையில் ரஷ்ய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த மலைக்குகைக்கு வெளியில் துணிகள் காயப்போடப்பட்டு இருந்தது. அதனை பார்த்து சந்தேகப்பட்ட போலீஸார் அங்கு சென்ற போது அங்கிருந்த குகைக்குள் சென்று பார்த்தபோது உள்ளே ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. மற்றொரு குழந்தையும், அதன் தாயாரும் அருகில் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி விசாரித்தபோது அப்பெண்ணின் பெயர் நினா குதினா(40) என்று தெரிய வந்தது. அவர் குகையில் மிகவும் ஆபத்தான இடத்தில் தனக்கான வீட்டை அமைத்து வசித்து வந்தார். உள்ளேயே தேவையான உணவுப்பொருட்கள் வைத்திருந்தார்.

அதன் மூலம் அவர்கள் சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டு உள்ளே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து கொண்டிருந்தனர். ரஷ்யாவை சேர்ந்த் நினா 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவரது விசா காலாவதியான பிறகும் தொடர்ந்து இந்தியாவிலேயே வசித்து வந்துள்ளார். குகைக்குள் பிளாஸ்டிக் சீட்டை விரித்து அதில் படுத்து உறங்கினர். தேவையான உணவுப்பொருட்களை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று வாங்கி வந்துள்ளார். அப்படி செல்லும்போது மொபைல் போனுக்கு சார்ஜிங் செய்து கொண்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது தனது பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதாக தெரிவித்தார். ஆனால் அங்கு தேடிப்பார்த்தபோது குகையில் அவரது பாஸ்போர்ட் கண்டுபிடிக்கப்பட்டது.

குகையில் இருந்து கொண்டு யோகா, தியானம் போன்ற ஆன்மிக காரியங்களில் ஈடுபட்டு வந்ததாக நினா தெரிவித்தார். தற்போது அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு துமகுரு பெண்கள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மின் விசிறி போன்ற வசதிகளை பார்த்தவுடன் இரண்டு குழந்தைகளும் மிகவும் ஆச்சரியப்பட்டனர். காட்டுக்குள் அவர்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதனை நினா மறுத்துள்ளார்.

இது குறித்து நினா அளித்த பேட்டியில்,” எங்களைப்பற்றி அதிக அளவு பொய்யை பரப்பிவிட்டீர்கள். நாங்கள் வனப்பகுதியில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நாங்கள் காட்டுக்குள் சாகவில்லை. எனது குழந்தைகளை சாகடிக்க நான் அவர்களை இங்கு கொண்டு வரவில்லை. அவர்கள் மோசமாக உணரவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். நீர் வீழ்ச்சியில் நீச்சல் அடித்து மகிழ்ந்தனர். நல்ல இடத்தில் உறங்கினர். அவர்கள் மண் சிற்பங்களை செய்தனர். கேஸ் அடுப்பில் சமையல் செய்து சாபிட்டோம். நாங்கள் ஆபத்தான நிலையில் வாழ்ந்ததாக கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை. எங்களுக்கு எந்த வித பிரச்னையும் இல்லை. நாங்கள் நன்றாக உடையணிந்தோம். நன்றாக சாப்பிட்டோம். இயற்கையை அனுபவித்து அதோடு இணைந்து வாழ்ந்தோம். எனது குழந்தைகளுக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுத்தேன்.

நாங்கள் ஒன்றும் பட்டினியால் சாகவில்லை. இது தொடர்பாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. எனது வாழ்க்கை முறை பற்றி சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் 20 நாடுகளில் உள்ள வனப்பகுதியில் வாழ்ந்திருக்கிறேன். ஏனென்றால் இயற்கையை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் எங்களை முதல் முறையாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் சோதித்து பார்த்ததில் எனது குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிய வந்தது. அவர்கள் முதல் முறையாக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நாங்கள் யாரும் உடல் நலம் பாதிக்கப்படவில்லை. நாங்கள் இயற்கையை விரும்பியதால்தான் கிராமத்திற்கு அருகில் குகையில் வாழ்ந்தோம்.

அருகில் கிராமம் இருப்பதால் எங்களால் தேவையானதை வாங்கிக்கொள்ள முடிந்தது. நாங்கள் வசித்த குகை மிகவும் அழகானது. நாங்கள் இருக்கும் இடம் ஆபத்தானது கிடையாது. ஆனால் நாங்கள் இருக்கும் இடத்தில் சில பாம்புகளை பார்த்து இருக்கிறோம். இங்குள்ள மக்கள் பாம்பு வீட்டின் சமையல் அறை உட்பட அனைத்து இடத்திற்கும் வரும் என்று தெரிவித்துள்ளனர். எங்களது விசா முடிந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால் போலீஸார் கண்டுபிடித்தது பழைய பாஸ்போர்ட். 2017ம் ஆண்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் வசிப்பதாக கூறப்படுவதில் உண்மை கிடையாது. 2017ம் ஆண்டுக்கு பிறகு 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு மீண்டும் இந்தியாவிற்கு வந்திருக்கிறோம். எனது மூத்த மகன் இந்தியாவிற்கு வந்தபோது இறந்துவிட்டான். அதன் பிறகுதான் இந்தியாவில் வசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக ரஷ்யாவில் வசிக்கவில்லை என்றும், உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். குழந்தைகளின் தந்தை யார் என்பதை நினா தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *