• July 15, 2025
  • NewsEditor
  • 0

நாம் தமிழர் கட்சி சமீபத்தில் நடத்திய ஆடு, மாடுகளின் மாநாடு, பனையேறி கள் இறக்கும் போராட்டம் ஆகியன விமர்சனங்களுக்கு உள்ளாகிவருவதோடு சீமானுக்கு சாதிய நோக்கம் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இச்சூழலில் அக்கட்சியின் சுற்றுசூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவனிடம் ஒது தொடர்பான கேள்விகளை முன்வைத்தேன்!

`கோரிக்கை எதுவாக இருந்தாலும் ஆடு-மாடுகளை அழைத்துவந்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?”

`⁠ `ஆடு-மாடுகளை அழைத்துவந்து மாநாடு நடத்தியது கவனயீர்ப்புக்காகத்தான். ஆனால் எங்கள் கோரிக்கை மிக முக்கியமானது. வெறுமனே `மேய்ச்சல் நில மீட்பு ⁠, ⁠ கள் இறக்கும் போராட்டம் ⁠ என பேசிவிட்டு செல்வதைவிட பனையேறுவதும், ஆடு-மாடுகளை அழைத்து வந்தது கோரிக்கைகளை முன்வைப்பதும் பெரியளவில் கவனம்பெற்றிருக்கிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் எளிதாக அரசையும் மக்களையும இதனால் சென்றடைந்திருக்கிறது என கருதுகிறோம்.”

நாதகவின் ஆடு மாடு மாநாடு

“ஆடு மாடுகள் பட்டியில் அடைத்து, மைக் சத்தங்களுக்கு முன் நிறுத்தியதை பலரும் விமர்சிக்கிறார்களே..!”

“மாடுகளை பட்டியில் அடைப்பது தவறு எனச் சொல்வோருக்கு விவசாயம், மாடுகளின் இனப்பெருக்கம் குறித்த எந்த புரிதலும் இல்லை என்பேன். பட்டியில் அடைத்துதான் பல்வேறு கால்நடை வளர்ப்பு சார்ந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மேலும், திருவிழாக்கள் பெருமளவில் கொண்டாடப்படும் பகுதிதான் மதுரையின் விராதனூர். மாநாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட கால்நடைகள் சத்தத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவைதான்.”

“சரி, மாநாட்டின் வாயிலாக நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் கோரிக்கைதான் என்ன?”

சீமான்

“வனங்களுக்குள் பல்வேறு பகுதிகள், மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாக நூற்றாண்டு காலமாக இருந்து வந்தன. ஆனால் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2021 முதல் மத்திய மாநில அரசுகள் அதற்கு தடைவிதித்திருக்கிறார்கள். அதற்கான தடையை உடைக்க வேண்டும் என்பதுதான் நா.த.க-வின் நோக்கம்.

மலைகளையே வெட்டி லாரிகளில் மற்ற மாநிலங்களுக்குக் கடத்தும் குற்றங்களைக் கண்டு கொள்ளாத அரசு இயந்திரம், ஆடு-மாநாடுகள் மேய்ப்பதற்குத் தடை விதிப்பதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த உரிமையை மறுக்கும் வண்ணம், மத்திய அரசு மேய்ச்சல் நிலம் தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வந்தபோது நா.த.க எதிர்த்தது.

அதேபோல் தமிழக அரசு நிர்வகிப்பில்வரும் 12 லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்களில் 40%ற்கு மேல் நகரமயமாக்கப்பட்டதையும் கண்டிக்கிறோம். இத்தீர்ப்பின் வழி ஒவ்வொரு கிராமங்களிலும் மேய்ச்சலுக்காக ஆடு-மாடுகளை அழைத்து செல்லும் விவசாயிகளை தமிழ்நாட்டு அரசின் காவல்துறையும் வனத்துறையும் துன்புறுத்தி கைது செய்யும் நிலையே உள்ளது.”

“ஆடு-மாடுகளை வனப்பகுதி மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கூடாது.. என நீதிமன்றத்தின் தீர்ப்புதானே.. இதற்கு மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யும்?”

“தமிழக அரசும், மத்திய அரசும் மேய்ச்சல் நில உரிமை மீட்பது குறித்து எந்த பார்வையும் இல்லாமல் இருப்பதுதான் வருத்தமளிக்கிறது. பாஜக அரசின் வனப் பாதுகாப்புச் சட்டம் 2023 இதற்கு உதாரணம். மேலும், 2021 வழக்கின் விசாரணையின்போது தி.மு.க அரசு முன்வைத்த வாதம் என்ன.., `2021-ல் வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு தடைக்கோரிய போது, மனுதாரரின் கோரிக்கையின் பக்கம் நிற்கிறோம், மேய்ச்சல் செய்பவர்கள் எங்கள் சொற்களைக் கேட்பதில்லை’ என்பதுதான். அரசு சார்பில் மேல்முறையீடும் செய்யவில்லை.”

வெண்ணிலா தாயுமானவன்

“மேய்ச்சல் நில மீட்பு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன்?”

“வேளாண் பெருங்குடி மக்கள்மீது எந்த அளவுக்கு இவர்கள் அக்கறை காட்டுகிறார்கள் என்பதற்கு இதுவொரு சான்று. முதலில் விவசாயத்தை மேன்மைப்படுத்தி அதன்வழி பொருளாதாரத்தை பெருக்கும் எதிர்காலப் பார்வையோ, எண்ணமோ துளியும் தி.மு.க அரசுக்கு இல்லை. கோடிகளில் ஊழல் செய்தும், லாபமீட்டும் வாய்ப்பு இல்லாததால் விவசாயத்தின்பக்கம் திரும்பி பார்க்கக்கூட மறுக்கிறார்கள்”

“ஆடு மாடு மேய்க்கச் சொல்வதன்மூலம், சீமான் ஒரு பிற்போக்குத்தனமான அரசியல்வாதி என்ற வாதத்தை முன்வைக்கிறார்களே!”

கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்

“ஆடு-மாடு மேய்ச்சலை ஒரு அரசின் துறைரீதியான முன்னேற்றமாக பார்க்கிறோம். பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ஆடு-மாடுகளை மையமாக கொண்டு பல்வேறு ஹை-டெக் தொழில் நகரங்களை காணலாம். அங்கே பணி செய்வோர் அனைவரும் பட்டதாரிகளே.. பார்ப்பது எல்லாம் ‘வொயிட் காலர்’ வேலைதான். பல்வேறு நாடுகளில் பணக்காரர்களின் தொழிலாகவே விவசாயம் இருக்கின்றன.

தமிழகத்தில் ஆடு-மாடு மேய்ச்சலை அரசுப் பணியாக்குவோம் என நா.த.க சொல்வதும் பிரேசில் போல நிறுவனமயப்படுத்தல்தானே தவிர, “யாரும் படிக்காதீர்கள், மாடு மேய்க்கலாம்” என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. பனை சார் பொருளாதாரம், இறைச்சி, பால் பொருளாதாரம் குறித்து பேசுவதெல்லாம் பிற்போக்குத்தனமா?, சீமான் வளர்ச்சிக்கு எதிரான தலைவர் என்பதெல்லாம் அப்பட்டமான காழ்புணர்ச்சி அரசியல். “

“சீமான் குலதொழிலை ஊக்குவிக்கிறார்… சாதிய நோக்கம் கொண்டு அரசியல் செய்கிறார் என்கிறார்களே!”

நா.த.க-வின் ஆடு-மாடு மாநாடு!

“பிறர் அவர்களிடத்தில் தேங்கியிருக்கும் சாதிய அழுக்கை எங்கள் மீது பூசி அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களுக்கு சாதி சாயம் பூசுவது, பனைசார் மற்றும் மேய்ச்சல் மற்றும் வேளாண் மக்களை சிறுமைப்படுத்தும் செயலாகும். ”சரி, ஐ.நா சபை எதிர்வரும் 2026-ம் ஆண்டை உலக மேய்ச்சல் நிலங்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மலைப்பகுதிகளின் ஆண்டாக அறிவித்துள்ளது (International Year of Rangelands and Pastoralists 2026). இப்போது ஐ.நா-வுக்கும் சாதிய நோக்கம் இருப்பதாக சொல்வார்களா…

ஆக, எந்த விவகாரமானாலும் சொல்வது சீமானாக இருந்தால், எதிர்க்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். . ஆடு-மாடு மாநாட்டை தொடர்ந்து மரங்களின் மாநாட்டுக்கு ஆயத்தமாகிறோம், மரங்களின் மத்தியில் சீமான் பேசத்தான் போகிறார். மரங்களுக்கு எந்த சாதியை வைத்து விமர்சிக்கப் போகிறீர்கள்..?”

“பனை ஏறுவது இன்றைக்கு ஒரு சமூகம்தானே செய்கிறதே!”

“மிகவும் தவறான கருத்து. சாதி கடந்த பனையேறிகள் தமிழகம் முழுக்க இருக்கிறார்கள். விரைவில் 1000 சாதி கடந்த பனையேறிகள் இணைந்து கள் இறக்கும் போராட்டம், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்க செயலாளர் அண்ணன் பாண்டியன் அவர்களின் ஒருங்கிணைப்பில் திருச்சியில் நடக்கயிருக்கிறது. அண்ணன் சீமான் கலந்து கொள்ளப் போகிறார்.

நா.த.க முன்வைக்கும் அரசியல் வெற்றிபெற்றுவிடும் என்ற அச்சத்தில், பொய் பரப்புரை தொடங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் இரண்டு பட்டங்களை பெற்றும் முனைவர் பட்டம் பெறப்போகிற நான், விவசாயத்தையே இலக்காக கொண்டிருக்கிறேன், இறுதியில் ஆடு மாடு மேய்க்கும் ஒருங்கிணைந்த பண்ணைதான் என் கனவு. ஆக விவசாயத்துக்கும், இயற்கைவழி பொருளாதார மீட்சிக்கும் சாதிசாயம் பூசும் பிரசாரம் பொய்யான ஒன்று, அது பொய்த்துப் போகும்.”

பனை மரத்தின் உச்சியில் சீமான்

“நா.த.க-வின் சுற்றுசூழல் பாசறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”

“தடையேறி பனையேறியதுபோல, தடையைமீறி வனப்பகுதியில் ஆடு-மாடுகளை அழைத்து மேய்ச்சலுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி செல்கிறார் அண்ணன் சீமான், மரங்களின் மாநாட்டுக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்தும், கடல் சார்ந்தும் ஏகப்பட்ட செயல்திட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்வைக்க உள்ளோம்.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *