
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நம்பள்ளி எனும் பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டின் அருகில் அந்தப் பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிரிக்கெட் பந்து கைவிடப்பட்ட வீட்டின் சுற்றுச்சுவருக்குள் விழுந்திருக்கிறது. அந்தப் பந்தை எடுப்பதற்காக அந்தச் சுவற்றில் ஏறி வீட்டுக்குள் சென்றபோது அதிர்ச்சித் தரும் வகையில், மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், வீட்டின் சமையலறை போல் தோன்றும் தரையில் ஒரு எலும்புக்கூடு முகம் குப்புறக் கிடப்பது பதிவாகியிருந்தது. அந்த எழும்புக்கூட்டைச் சுற்றி பல பாத்திரங்கள் கிடப்பதைக் காணலாம்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறப்பு துப்பறியும் குழு வீட்டிற்குச் சென்று பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்தது. அதே நேரத்தில் இறந்த நபரின் அடையாளத்தை அறிய எழும்புகளை பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இது குறித்துப் பேசிய காவல்துறை துணை ஆணையர், “காவல்துறை குழு வீட்டிற்குச் சென்று, கதவை உடைத்து மனித எழும்புக்கூடுகளைக் கைப்பற்றியிருக்கிறது. வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாகவும், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீடு காலியாக இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடு முனீர் கான் என்பவருக்கு சொந்தமானது. அவருக்கு 10 குழந்தைகள் இருந்தனர். அவரது நான்காவது குழந்தை இங்கு வசித்து வந்ததாகவும், மீதமுள்ளவர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. கிடைத்திருக்கும் எழும்புக்கூட்டின் அடிப்படையில், இறந்த நபர் சுமார் 50 வயதுடையவராக இருக்கலாம்.
திருமணமாகாதவராகவும், மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் இருக்கலாம். அவர் இறந்து சில வருடங்களாகிவிட்டதாக தெரிகிறது. எலும்புகள் கூட நொறுங்கிப் போயிருந்தன. இது இயற்கையான மரணமாக இருக்கலாம். மேலும் அறிய உறவினர்களிடம் பேச முயற்சிக்கிறோம்.” என்றார்.