
காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. அப்போது அவரைத் தடுத்த காவல்துறை அதிகாரிகள், அவரை நினைவிடத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி நுழைவாயிலைப் பூட்டியிருந்தனர்.
13-ம் தேதி முதல், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஒமர் அப்துல்லா, சுவர் ஏறிக் குதித்து நினைவிடத்துக்குச் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார். காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்துச் செல்லும் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தன் எக்ஸ் பக்கத்தில் , “தியாகிகள் நாளை முன்னிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதால், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், நினைவிடத்துக்கு வந்தேன். அப்போது, என்னை காவலர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்யப்படுவதாகக் கூறுகிறார்கள்.
எந்த சட்டத்தின் கீழ் நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தெரிவிக்க வேண்டும். இது சுதந்திர நாடு என்று கூறுகிறார்கள். ஆனால், எங்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள். இந்த நினைவிடம் எப்போதுமே இங்குதான் இருக்கிறது. நேற்று தடுத்துவிட்டார்கள். எத்தனை நாள்களுக்குத்தான் தடுத்துவைக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஒமர் அப்துல்லாவின் பதிவை டேக் செய்த தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் வேளையில், அங்கு நடக்கும் தற்போதைய நிகழ்வுகள் நிலைமை எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதை நினைவூட்டுகின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஒமர் அப்துல்லா 1931 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதனால், சுவர்களில் ஏறிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? இது ஒரு மாநிலம் அரசுக்கோ, அல்லது ஒரு அரசியல் தலைவருக்கோ மட்டும் நடப்பது அல்ல. தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை, ஒன்றிய பா.ஜ.க அரசு மாநில அரசுகளின் உரிமைகளை இப்படித்தான் பறித்து வருகிறது.
காஷ்மீரில் இது நடக்க முடிகிறது என்றால், அது இந்தியாவின், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு மக்கள் பிரதிநிதிக்கும் நடக்கலாம். ஒவ்வொரு ஜனநாயகக் குரலும் இதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.