
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
ஆனால், தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திராவில், துணை முதலமைச்சரும், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சமீப காலமாக இந்திக்கு ஆதரவான நிலைப்பாட்டில் பேசிவருகிறார்.
அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் பேசியிருக்கும் பவன் கல்யாண், “இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்? நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
ஆனால், அவர் இந்தியை விரும்பினார். மொழி என்பது இதயங்களை இணைக்கும் என்று அவர் கூறுவார்.
எனவே, இந்தி மொழியை அவரது பார்வையில் நாம் பார்ப்போம். யாரும் அதைத் திணிக்கமாட்டார்கள், யாரும் அதை வெறுக்கமாட்டார்கள். அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளுங்கள்.
இந்தி கட்டாயமான ஒன்றல்ல, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழி.
வேலைக்காக ஜெர்மனிக்கு செல்லும்போது ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்கிறோம், ஜப்பானுக்குச் செல்லும்போது ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறிருக்கும்போது, நம் சொந்த இந்தி மொழியைக் கற்றுக்கொள்ள நாம் ஏன் பயப்படுகிறோம்?

எதற்காக இந்த தயக்கம். வெறுப்பையும், தயக்கத்தையும் நாம் விட்டுவிட வேண்டும்.
நம் மீது இந்தி திணிக்கப்படுவதாக சிலர் அரசியல் செய்கிறார்கள். ஆங்கிலத்தை நவீன மொழி என்று கூறி ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்ளும்போது, இந்தியை ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது? அதிலென்ன தவறு இருக்கிறது?

உலகம் முழுவதும், மக்கள் மொழியால் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில், இந்தி ஒரு ஒன்றிணைக்கும் சக்தியாக நிற்கிறது.
மாநிலங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றைக் கடந்து நம்மை இணைக்கும் மொழி இது. நம் தேசிய மொழியாக இந்தியை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
நம்முடைய அடையாளத்துக்கு நம் தாய்மொழி தேவை. அதேசமயம், நாம் நம் வீடுகளைத் தாண்டி பரந்த சமூகத்தில் அடியெடுத்து வைக்கப் பொதுவான மொழி வேண்டும். அதுதான் நமது ராஷ்டிர மொழி இந்தி.
நம்முடைய தாய்மொழி நமக்கு தாய் போல என்றால், இந்தியாவின் அனைத்து மொழியியல் குடும்பங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் மூத்த தாய் இந்தி.
இந்தி மீதான வெறுப்பை விடுங்கள். அதை ஏற்றுக்கொள்வோம்.” என்று கூறினார்.