
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் 11 நாள்களில் 31 கொலைகள் நிகழ்ந்துள்ளதைக் கண்டித்துப் பேசுகையில் பீகார் நாட்டின் ‘இந்தியாவின் குற்றத் தலைநகரம்’ என விமர்சித்துள்ளார்.
பீகாரில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியின் (ஜனதா தளம் தலைமையில்) குண்டர்கள் ஆட்சி நடப்பதாக Gu’NDA’ Raj எனக் கூறியதுடன், முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆட்சியை கவனிப்பதைவிட அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதிலேயே அதிக நேரம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் தேர்தல் நெருங்குவதனால் அரசியல் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது ஆளும் அரசை தூக்கியெறிந்து, பீகாரைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் பிரசாரங்களைத் தொடங்கியுள்ளது காங்கிரஸ்.
ராகுல் காந்தியின் ட்வீட்டில், “பீகார் இந்தியாவின் குற்றத்தலைநகராக மாறியுள்ளது. ஒவ்வொரு சந்துகளிலும் பயம் அப்பிக்கொண்டுள்ளது. எந்த ஒரு வீட்டிலும் அமைதி இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
Gu’NDA’ Raj ஆட்சியால் மாநிலத்தில். வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் வன்முறையை நோக்கி தள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

“பீகார் முதலமைச்சர் தன் சீட்டுகளைப் பாதுகாப்பதிலேயே கருத்தாக இருக்கிறார். பாஜக அமைச்சர்கள் கமிஷன்களில் திளைக்கின்றனர். நான் மீண்டும் சொல்கிறேன். இந்த முறை உங்கள் வாக்கு அரசை மாற்றுவதற்காகனதல்ல, பீகாரைக் காப்பாற்றுவதற்கானது” என்றார் ராகுல்.
பீகாரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. 11 நாள்களில் 31 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் தொழிலதிபரும் பாஜக தலைவருமான கோபால் க்மேகா தனது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளன.
இன்று ஜூலை 14ம் தேதி அமித் குமார் என்ற 25 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த வாரத்தில் இருவேறு சம்பவங்களில் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெகுசராய் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் பிரின்ஸ் குமார் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவங்கள் மாநிலத்தில் துப்பாக்கி கலாசாரம், கூலிப்படைகள் பெருகுவதாக கவலைகளை எழுப்பியுள்ளன.
இத்துடன் பாஜக தலைவர் சுரேந்திர குமார், 60 வயது மூதாட்டி ஒருவர் மற்றும் ஒரு கடைக்காரர் கொலைகள் மாநிலத்தை உலுக்கியது.
பீகாரின் குற்றப் பதிவு பணியகம் (SCRB) அளித்துள்ள தகவல்களின் படி பீகார் மாநிலத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மட்டுமே 1,376 கொலைகள் நடந்துள்ளன. சராசரியாக மாதம் 229 கொலைகள். 2023, 2024 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே 2863, 2786 கொலைகள் நடந்துள்ளன.
தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB) தரவுகளின் படி, பீகார் தொடர்ந்து நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடைபெறும் டாப் 5 மாநிலங்களில் ஒன்றாக இடம்பிடித்து வருகிறது.