
சிவகங்கையில் காவல்துறையினரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் இறப்புக்கு நீதி வேண்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்.பி கனிமொழி விஜய்யை விமர்சித்திருக்கிறார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய், ‘அஜித் குமாரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதைப் போல கடந்த 4 ஆண்டுகளில் லாக்கப் டெத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பத்திடமும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்.’ எனப் பேசியிருந்தார்.
நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கனிமொழியிடம் இதை முன்வைத்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கனிமொழி, ‘சில நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் ‘லாக்கப் டெத்’ சம்பவங்களை நியாயப்படுத்தும் விதமாக நடிக்கிறார்கள். புதிதாக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வது பெரிய நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது.’ என்றார்