
சென்னை ஆயிரம் விளக்கு சுரங்கப்பாதை பகுதியில், நான் எப்போதும் போல பூ வாங்குவதற்கு பூக்கடைக்கு சென்றிருந்தேன். எப்போதும் இருக்கும் பூ விற்க்கும் பாட்டி இன்று அங்கு இல்லை. என்னசெய்வதென்று தெரியாமல் அருகில் இருந்த செருப்புத்தைக்கும் பாட்டியிடம் கேட்டேன்.
அந்த பாட்டி, எனக்கு தெரியாது என்று சொன்னார். சிறிது நேரம் அங்கேயே காத்துக்கொண்டு இருந்தேன். பிறகு அந்த செருப்புத்தைக்கும் பாட்டி, செருப்புத்தைக்க வந்த பெண்ணிடம் நெகிழ்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அதை பார்க்கும்போது எனக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. அந்த பாட்டியிடம் பேசவேண்டுமென்று தோன்றியது. அந்த பாட்டியிடம் மெதுவாக பேச்சுக்குடுத்தேன்.
“என்னோட பேரு முனியம்மா. எனக்கு 75 வயசு ஆகுது. என்னோட சொந்த ஊரு இலப்பாக்கம். 23 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு மெட்ராசுக்கு வந்தேன். எனக்கு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடிலாம் செருப்புத்தைக்க தெரியவேத்தெரியாது. எங்க வீட்டுக்காறங்கள கட்டனதுக்கு அப்பறம்தான் செருப்புத் தைக்க கத்துகிட்டேன்.
எங்க வீட்டுக்கார் பேரு நடேசன். அவரு நல்லா குடிப்பாரு. அதனால எங்களுக்கு கல்யாணமான 12 வருசத்துலயே குடல்வெந்து இறந்துப்போய்ட்டார். எனக்கு மொத்தம் 5 பிள்ளை. அதுல ரெண்டு இறந்து போய்டுச்சி. இப்போ இருக்குறது ஒரு ஆணு, ரெண்டு பொண்ணு. எனக்கு மொத்தம் 11 பேரப்பிள்ளைங்க.
நான் செருப்புத் தைக்க கத்துகிட்ட ஆரம்ப காலத்துல ஒரு ஜோடி செருப்பு வெறும் மூன்றுபாய்தான். தைக்கறதுக்கு 50 பைசா. ஆன, இப்போ 5000 ரூபாய்க்கு கூட செருப்பு இருக்கு. முன்ன மாதிரியெல்லாம் தைக்கறதுக்கு அதிகபேர் வரதில்ல. ஆனாலும் தினமும் வராங்க. இதுவரைக்கும் ஒருத்தர்கூட செருப்புத்தைக்க வராதநாள் இல்லவே இல்ல. எங்க வீட்டுக்காரர் அடிக்கடி ஒன்னு சொல்லுவார். சோத்து உலை வச்சிட்டு வந்து உக்காரு, உலை கொதிக்குறதுக்கு முன்னாடி வேலைவரும் என்பார். என்னோட உழைப்பிலதான் என்னோட பொண்ணுக்கு 8 பவுன் போட்டு கட்டிக்கொடுத்தேன். இருந்தும் இப்பவும் நான்தான் அவங்கள பார்த்துக்கிறேன். என்னை யாரும் பாத்துக்குறது இல்லை. அவங்களுக்கு அந்த எண்ணமும் இல்ல. அவங்களுக்கு எதாவது கஷ்டம்னா ஏங்கிட்டதான் கேப்பாங்க. நான்தான் குடுத்து உதுவுவேன்.

சாப்பாட்டை திறந்து கொண்டே சொன்னார். இத்தனைக்கும் எனக்கு BP, சுகர், மார்வலி இருக்கு. ஆனால், அவங்களுக்குநான் எப்பவும் பாரமாக இருக்ககூடாதுனு தோனிக்கிட்டே இருக்கும். அதனால, நானே ஹாஸ்பிட்டல் போவேன், சாப்பாடு செஞ்சுக்குவன், இதோ, நாள் முழுக்க வெயில்ல வேலைசெய்கிறேன். இதுல எத்தனையோ பேரு செருப்புத் தச்சிட்டு காசு குடுக்காம ஏமாத்திட்டு போய்ருக்காங்க. அப்போ நான் இருக்குறவங்க குடுப்பாங்க, இல்லாதவன் ஏமாத்துவாங்கனு நெனைச்சுக்குவேன். எனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது. அதனால,யாராவது சாப்பாடு கொடுத்தா அத வீணாக்காம என் புள்ளக்கிட்டையோ, இல்ல பக்கத்துல இருக்குற வேற யார்கிட்டயாச்சும் குடுத்துடுவேன். காரணம், சோறு வீணா போககூடாது. அதுக்காகத்தான் நாம கஷ்டப்பட்டு உழைக்குறோம்.
நான் எந்த நோய்க்கும் பயப்படறது இல்ல. மாத்தர மட்டும் வேலாவேலைக்கு போட்டுக்குவேன். காலைல ஆறு மணிக்கு எழுந்திருப்பேன். வீட்டுவேலைய முடிச்சிட்டு தி.நகர்ல இருக்குற என்னோட தம்பி வீட்டுல இருந்து, 9 மணிக்குளாம் இங்க வந்துடுவேன்.

பலமுற செருப்புத்தைக்கும்போது, கைல குத்தி இருக்கு, கிழிச்சுருக்கு, பயங்கரமா ரத்தம் வரும். ஆன அதலாம், பொருட்படுத்தாமதான் செருப்பத்தச்சி குடுப்பேன். ஒருசில செருப்பு ரொம்ப கனமா, தந்தம்போல இருக்கும். அதலாம், தைக்கவும் முடியது, ஒட்டவும் முடியாது. அதுலாந்தான் தைக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும். அப்புறம், ரோட்டுல கட வச்சிருக்கறாதால போலிஸ்காரங்க வருவாங்க, இங்க கட வைக்ககூடாதுனு சொல்லுவாங்க அப்பலாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். 50 வருஷமா நான் இங்க செருப்புத்தச்சிகிட்டு இருக்கேன். நானும் அப்போதிலிருந்து இப்போவரைக்கும் உழச்சிதான் சாப்பிடுறேன். உழைப்பு கண்டிப்பா இருக்கணும். உழைக்காம யாரும் இருக்ககூடாது.” – என்றார் உறுதியுடன்.
– ரா.விசாலாட்சி