• July 14, 2025
  • NewsEditor
  • 0

திமுக-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம். இவர் ராஜ்ய சபா எம்.பியாகவும் இருக்கிறார். கல்யாணசுந்தரம் பெயர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் அடிப்பட்டு வந்தது. இந்தநிலையில், மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கல்யாணசுந்தரத்தை நீக்கிய திமுக தலைமை, எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனை மாவட்ட பொறுப்பாளராக அறிவித்துள்ளது கும்பகோணம் தி.மு.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்.பி கல்யாணசுந்தரம்

இது குறித்து விபரம் அறிந்த தி.மு.க கட்சி தரப்பில் சிலரிடம் விசாரித்தோம், சீனியரான கல்யாணசுந்தரம் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ்யசபா எம்.பி ஆக்கியது தலைமை. அதன் பின்னர் கல்யாணசுந்தரம் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது ஏற்படுத்திய சலசலப்பு அடங்கவில்லை.

இதற்கிடையில், அரசு விழா ஒன்றில் கல்யாணசுந்தரம், “எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதத்திற்கு பிறகு தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்போ, திருமணம் நடக்கின்ற அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாக தான் பிறக்கும்” எனப் பேசியது சர்ச்சையானது.

எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்

பிரஸ் மீட் ஒன்றில் துண்டு சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்து அந்த கேள்வியை மட்டும் கேட்க வேண்டும் என செய்தியாளர்களை நிர்பந்தம் செய்ததும் விமர்சனம் ஆனது.

கும்பகோணம் பரஸ்பர ஸ்காய நிதி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவரது காரை நிறுத்துவதற்காக வாய்க்காலை ஆக்கிரமித்து சிமெண்ட் தளம் அமைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் கல்யாணசுந்தரம் மகன் முத்துசெல்வன் மிரட்டும் தொனியில் பேசி திருப்பி அனுப்பினார்.

அதன் பின்னர் அழுத்தம் கொடுத்து அந்த ஆணையரை டிரான்ஸ்பர் செய்ய வைத்ததும் விவாதத்தை கிளப்பியது. நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி சுதாவை வைத்து கொண்டே, காங்கிரஸ் கட்சியில் இங்கு ஆளே இல்லை. தலைமை சொல்லியதால் உங்களை ஜெயிக்க வைத்தோம். உங்க எம்.பி நிதியை கும்பகோணம் வளர்ச்சி பணிகளுக்கு செலவிட வேண்டும் என்றது சுதா மற்றும் காங்கிரஸ் தரப்பை கோபம் கொள்ள வைத்தது.

கும்பகோணம்

கும்பகோணம் காங்கிரஸ் மேயர் சரவணனை தன் கைக்குள் வைத்து கொண்டார். சரவணன் கல்யாணசுந்தரத்தை அப்பா என்று தான் அழைப்பார். ஒரு முறை மன்ற கூட்டத்தில் விதியை மீறி கலந்து கொண்டு பேசினார் கல்யாணசுந்தரம். சரவணனை துணை மேயர் தமிழழகன் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு எதிராக செயல் பட வைத்தார். மாமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்துக்கு காரணம் கல்யாணசுந்தரம் என திமுகவினர் வெளிப்படையாக பேசினர்.

கும்பகோணத்தில் கலைஞர் அறிவாலயம் கட்டும் பணி நடக்கிறது. இந்நேரம் திறந்திருக்க வேண்டியதை இதுவரை முடிக்கவில்லை. அதற்கான கட்சி நிதியை முறையாக செலவு செய்யவில்லை எனவும் புகார் எழுந்தது.

கும்பகோணம் ரிங் ரோடு அமைப்பதற்கான 3ம் கட்ட பணிக்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்திற்கு பதிலாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் தனிப்பட்ட நலனுக்காக விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் விளை நிலத்தில் மாற்றி அமைக்க வைத்ததாக சர்ச்சை எழுந்தது. இதை கண்டித்து பா.ஜ.க-வினர் விவசாயிகளுடன் சேர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்யாணசுந்தரம்

புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை தான் ஆதாயம் அடைகின்ற வகையில் கொண்டு செல்வதற்கு மெனக்கெட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இவருடய மகன் முத்துச்செல்வன் வாட்டர் பாட்டில் கம்பெனி ஒன்றை நடத்தினார். போலி ஐஎஸ்ஐ முத்திரையுடன் வாட்டர் பாட்டில் தயாரித்ததாக கூறி அந்த கம்பெனிக்கு சமீபத்தில் சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன் எலைட் பார் நடத்துவதாக சொல்லப்படுகிறது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கல்யாணசுந்தரம் செய்து தருகிறார் என்கிறார்கள். கிட்டதட்ட இவரும் அதில் மறைமுக பார்டனராக இருப்பது போல் செயல்படுவதாக புகார் எழுந்தது. கட்சி நிர்வாகிகளை மதிக்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்கும் நிர்வாகிகளை ப்ளாக் லிஸ்டில் வைத்து விடுவார்.

தலைமை கவனிக்கும் என தெரிந்தும் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வந்தார். இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இவருக்கு எதிரான நிர்வாகிகள் இவரின் தவறான செயல்களை புகாராக முன் வைத்தனர். அதன் பிறகே மாவட்ட செயலாளர் பதவியை பறித்து விட்டு தொடர்ந்து கும்பகோணம் எம்.எல்.ஏவாக இருக்கும் சாக்கோட்டை அன்பழகனை பொறுப்பாளராக நியமித்துள்ளனர்.

பதவி பறிப்பு குறித்து கல்யாணசுந்தரத்திடம் பேசினோம், “மூன்று பதவிகள் வகிக்கிறேன் அதன் பணிகளை சேர்த்து பார்க்க முடியவில்லை. அதனால் நீக்கியுள்ளனர் வேறு எதுவும் காரணம் இல்லை” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *