
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என த்ரீ ஸ்டார்களுக்கு நாயகியாக நடித்த ‘டாப் ஸ்டார்’ நடிகை சரோஜா தேவியின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் படமான ‘புதிய பறவை’ வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விகடன் தீபாவளி மலருக்காக சரோஜா தேவியை சந்தித்துப் பேசினோம். அந்தப் பேட்டியின் சில பகுதிகள் இங்கே….
இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில உங்களோட சாதனையாக கருதுவது?”
“சினிமா இன்டஸ்ட்ரில இதுவரைக்கும் என்மேல ஒரு கெட்டப்பேரு கூட கிடையாது. இதுவே மிகப்பெரிய சாதனைதான். மிக முக்கியமா கவர்ச்சியா நடிச்சேன்னு யாராலும் சொல்லமுடியாது. டீசண்ட்டா ட்ரெஸ் பண்ணுவேன். எனக்குன்னு சினிமாவுல ஒரு பாலிஸியை வகுத்துக்கிட்டு ஒரே நேர்க்கோட்டுல பயணிச்சேன். நல்ல நடிகைன்னு பேர் வாங்கினேன். என்னோட தொழிலை நான் ரொம்ப நேசிச்சேன். மற்றவங்க மாதிரி நான் கிடையாது. சரோஜா தேவி எப்போதும் வேற மாதிரிதான். எல்லார்க்கிட்டேயும் ரொம்ப அன்பா இருப்பேன், மரியாதை கொடுப்பேன். யார் வந்தாலும் எழுந்து நின்னுதான் வணங்குவேன். அதனால, எல்லாருமே என்னை ரொம்ப பிடிக்கும். கடவுளோட தயவால் நல்ல நல்ல கேரக்டர்களில் நடிச்சு பேரும் புகழும் கிடைச்சது. இதைவிட, வேறு என்ன சாதனை வேணும்?”
உங்கள் திரைவாழ்க்கையில் நடித்தக் கேரக்டர்களில் உங்களுக்கு மன நிறைவை கொடுத்த படம் எது?”
“நான் நடிச்ச படங்களிலேயே எனக்கு பிடித்த கேரக்டர்ன்னா ‘இருவர் உள்ளம்’ படத்தில் நடித்ததுதான். நல்லப்படம் மட்டுமில்ல, எனக்கு ரொம்ப பாராட்டுகளை குவித்த படம். இந்தப் படத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்தான் திரைக்கதை, வசனம் எழுதினார். அவர், எழுதின டயலாக்கைதான் நான் பேசி நடிச்சேன். படம் ரிலீஸுக்கு அப்புறம் படத்தை பார்த்துட்டு ரொம்ப நல்லா நடிச்சிருக்கன்னு கலைஞர் பாராட்டினார். கலைஞரின் எழுத்து, பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”
“ஜெயலலிதாவுக்கும் உங்களுக்குமான நட்பு?”
“ஜெயலலிதாவை எனக்கு எப்படி ரொம்பப் பிடிக்குமோ, அவங்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அடிக்கடி வரவைத்து நேரில் சந்தித்து பழைய விஷயங்களைப் பற்றி பேசுவாங்க. ஒரு நடிகையா இருக்கும்போது எப்படி நட்பா பேசுவாங்களோ அதே நட்போடதான் என்னிடம் பேசுவாங்க. முதல்வரா மக்களுக்காக நிறைய செஞ்சிருக்காங்க.”

“புதிய பறவை படத்தில் சிவாஜியைப் பார்த்து ‘கோப்… கோப்பால்’ன்னு நீங்க செல்லமா கூப்பிடுறது. ‘அத்தனையும் நடிப்பாஆஆஆ’ என சிவாஜி க்ளைமாக்ஸுல அழுவுறதும் இன்னைக்கும் பலராலும் பேசப்படும் காட்சி. அந்தக் காட்சியில நடிக்கும்போது எப்படி இருந்தது?”
“நான் ரொம்ப இயற்கையான நடிகை. ஒரு காட்சியை சொல்லிட்டாலே அந்த காட்சிக்கு எப்படி நடிக்கணும்னு தானேவே எனக்கு வந்துடும். அப்படித்தான், அந்த காட்சியில உணர்வுப்பூர்வமா நடிச்சேன். என் வேலையை மிகச்சரியா பண்ணினேன். இதற்காக, ஸ்பெஷலா பயிற்சி எடுத்துக்கிட்டுல்லாம் நடிக்கல. கேஷுவலா பண்ணினதாலதான் அந்த காட்சி இப்பவும் பேசப்படுது!”
“புதிய பறவை படத்தை இப்போ ரீமேக் பண்ணினா, உங்களது கதாப்பாத்திரத்தில் எந்த நடிகை நடிச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறீங்க?
“60 வருடங்கள் ஆகிடுச்சு. ஆனாலும் படத்துக்கான வரவேற்பு இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. மற்றபடி, இப்போ இருக்கிற நடிகைகளில் யார் நடிச்சா சரியா இருக்கும்னு சொல்லமுடியல. ஏன்னா, நான் இப்போ படங்கள் அதிகமா பார்க்கிறதில்ல. ரீமேக், ரீ-ரிலீஸ் எல்லாம் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யணும்”

“இளம் வயதிலேயே உங்க கணவர் இறந்துட்டார். நீங்க ஏன் மறுமணம் செய்துக்கலங்குற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்ததே? உங்க குடும்பத்திலிருந்து வேற யாரும் ஏன் நடிப்புத்துறைக்குள்ள வரல?”
“என் கணவர் ரொம்ப அன்பானவர். அவரோட கேரிங் ரொம்ப பிடிக்கும். ரொம்ப ஒழுக்கமானவர். எல்லா விஷயத்திலும் டிசிப்ளினா நடந்துக்குவார். மறுமணம் பண்ணிக்காதது எல்லாம் ஒரு விஷயமா? எனக்கு இஷ்டம் இல்ல. மறுமணம் செஞ்சுக்க தோணவும் இல்ல. அதேமாதிரி, என் பிள்ளைங்களுக்கு நடிப்புத்துறையில வர்றதுல விருப்பமில்ல. அதனால, நான் யாரையும் ஃபோர்ஸ் பண்ணல. என்னுடைய குடும்பமே ரொம்ப அன்பான குடும்பம். எங்கப்பாம்மாவுக்கு நாங்க எல்லாருமே பெண் குழந்தைங்கதான். நான்தான் கடைக்குட்டி. சகோதரிகள் எல்லாரும் இறந்துட்டாங்க. ஒரே ஒரு அக்கா மட்டும்தான் உயிரோடு இருக்காங்க. எப்போதும் அதே அன்போடு இருக்கோம்”
முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்