• July 14, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலையின் உச்சியில் நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி வெங்கடாசலபதி, இந்த மலையிலேயே தங்கியதாக கருதப்படுகிறது. இக்கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் கடந்த 1989-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் கும்பாபிஷேகம் செய்வதற்காக கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கியது.

கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்கள்

பெருமாள் சந்நிதி உட்பிரகார தரைத்தளத்தில் கற்கள் பதித்தல், கோபுரத்தில் வர்ணம் பூசுதல், அன்னதான கூடம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றது.

ஜூலை 3-ம் தேதி முதல் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கருவறை திருப்பணிகள் தொடங்கியது. ஜூலை 12-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. இன்று காலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி, புண்யகாவாசனம், காலசந்தி பூஜை, அக்னி ஆராதனம், மூர்த்தி ஹோமங்கள் நடைபெற்றது.

காலை 5.15 மணிக்கு கடம் புறப்பாடாகி, காலை 5.45 மணிக்கு பெருமாள் சன்னதி விமானம், சாள கோபுரம், ரமார் பாதம் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மூலவர் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று ராஜ அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *