
முருகக்கடவுளின் முதல் படைவீடான உலகப்புகழ் பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலையில் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழில் வேத மந்திரங்கள் முழங்க, தேவாரம் திருமுறை இசைக்க, சிறப்பான முறையில் திருப்பரங்குன்றம் குடமுழுக்கு விழா, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அரோகரா கோஷங்கள் முழங்க நடைபெற்றது.
25 ட்ரோன்கள், ஐந்து புனித நீர் தெளிப்பான்கள் எல்.இ.டி திரைகள், குடிநீர், உணவு, மருத்துவ வசதிகளுடன் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது.
கும்பாபிஷேகம் முடிந்த பின்பு 48 நாள்கள் முருகனை தரிசித்தால் இன்றைக்கு என்ன புண்ணியமோ அதே புண்ணியம் கிடைக்கும். குடமுழுக்கு கண்டவர்கள் முருகன் தரிசனம் செய்ய பொறுமையாக செல்ல வேண்டும். திராவிட மாடல் முதல்வர் ஆட்சியில்தான் இப்படிப்பட்ட குடமுழுக்கு விழாக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு, இனத்தால் மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்தக்கூடிய சக்திகளுக்கு இடையே அமைதியோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் இங்கு கூடியிருக்கிறார்கள், ஒரே நாளில் தரிசனம் செய்வது என்பது சற்று கடினம்தான், எனவே பக்தர்கள் பொறுமையாக சாமி தரிசனம் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் குடமுழுக்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட முறை நானும் அமைச்சர் மூர்த்தியும் ஆய்வு செய்தோம், மக்கள் மனம் மகிழும் அளவிற்கு இந்த குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இதுவரை 3347 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம்.

முருகனின் அறுபடை வீடுகளுக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இதுவரை முருகக் கடவுள் கோயில்களுக்கு மட்டும் 124 குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது” என்றார்.