
தென்காசி நகராட்சி 33 வார்டுகளைக் கொண்ட பகுதியாகும். நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்றக் கூட்டம் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதில் தொடர்ந்து மன்ற விவாத பொருட்கள் வாசிக்கப்பட்டது. அனைத்து வார்டு கவுன்சிலர்களும் தென்காசி நகர்ப் பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் பிரச்னை நீடித்து வருவதாகக் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
பல நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் நகரின் பல பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பலர் வெளியிலிருந்து தண்ணீரை பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இயலாதவர்கள் வெகு தூரம் சென்று தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய விதிகளைப் பயன்படுத்தி குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலைத்தொட்டி, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் போன்ற திட்டங்களை விரிவுபடுத்தப் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இருந்தும் இது போன்ற எந்த ஒரு வளர்ச்சி பணிகளுமே இங்கு நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்தக் குடிநீர் பிரச்னையை மேலும் வலியுறுத்தும் வகையில், 10வது வார்டு பகுதியைச் சேர்ந்த சுயேச்சை கவுன்சிலர் முகமது ராசப்பா, ‘தங்கள் பகுதிகளில் இந்தக் குடிநீர் பிரச்னையானது உச்சநிலையில் இருக்கிறது.

இந்தக் குடிநீர் பிரச்னை தொடர்ந்து மக்கள் பிரச்னையாக நீடிக்கக்கூடிய நிலையில் அதிகாரிகளுக்குத் தலைவலியாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே தலைவலி மருந்தை நானே தருகிறேன். இதனை எடுத்துக் கொண்டு மக்கள் பிரச்னையான குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி, நகர்மன்ற தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்குத் தலைவலி மருந்தைக் கொடுத்தது பேசுபொருளானது.