
கேரள மாநில பா.ஜ.க சார்பில் திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்துவைத்தார். பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “பினராயி விஜயன் வெளிநாட்டுக்கு போயிருக்கிறார். திருவனந்தபுரத்தில் பா.ஜ.க-வின் பெரிய மாநாடு நடக்கிறது என அங்கிருக்கும் அவருக்கு தெரியும் அளவுக்கு நம் ஆர்ப்பரிப்பு இருக்க வேண்டும். அழகான மலையாள மொழியில் உங்களிடம் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன். மன்னத்து பத்மநாபன், ஸ்ரீநாராயணகுரு, அய்யன்காளி, பண்டிட் கருப்பன், ஆதிசங்கரர் ஆகியோர் பிறந்த இந்த மண்ணை வணங்குகிறேன். பா.ஜ.க அலுவலகத்தை திறக்கும்போது கட்சிக்காக உயிர் நீர்த்த நூற்றுக்கணக்கான பலிதானிகள் என் கண்முன் வந்து சென்றார்கள். கடந்த சுமார் 15 ஆண்டுகளாக கேரளாவுக்கு வந்து செல்கிறேன். கேரளாவில் இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்துவது பா.ஜ.க-தான். இதை பார்க்கும்போது கேரளாவில் பா.ஜ.க-வின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கு பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் வரவேண்டும் என ஸ்ரீபத்மநாபனிடம் வேண்டுகிறேன். மற்ற அரசியல் கட்சிகளின் அலுவலகம் என்றால் செயல்படுவதற்கு மட்டும்தான் இருக்கும். நம் அலுவலகம் கோயிலைப் போன்று புனிதமானது. கட்சிக்கு அனைத்துமாக இருப்பவர்கள் நம் நிர்வாகிகள்தான். சட்டசபைக்கு மக்கள் பிரதிநிதிகளை அனுப்பவும், கேரளா வளர்ச்சிக்காகவும் நம் அலுவலகம் கேந்திரமாக அமைய வேண்டும். வளர்ச்சியான பாரதம் என்பதை 145 கோடி மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அதுபோன்று, கேரளா மூலம் வளர்ச்சியான பாரதம் அமைக்க உள்ளோம் என்பதை கேரளா சகோதர சகோதரிகளிடம் தெரிவித்துக்கொள்கிறேன். தென் மாநிலங்கள் வளராமல் வளர்ச்சியான பாரதம் அமையாது.
பிரதமர் மோடி முன்வைக்கும் ஊழலற்ற, பாகுபாடு இல்லாமல் அரசு திட்டங்களை செயல்படுத்தும், வாக்குவங்கியை முடிவுக்கு கொண்டுவரும் வளர்ச்சியை கொண்டுவரவேண்டும். சி.பி.எம், பா.ஜ.க ஆகியவை தொண்டர்களை மையமாகக்கொண்ட கட்சிகளாகும். ஆனால், லட்சியத்தில் இரண்டுக்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளன. பாஜக-வின் லட்சியம் கேரளாவின் வளர்ச்சி என்றால், சி.பி.எம் கட்சியின் லட்சியம் என்பது அவர்களின் அணிகளின் வளர்ச்சி ஆகும். பா.ஜ க லட்சியம் தொண்டர்கள் மட்டும் அல்லாமல் முழு கேரளத்தின் வளர்ச்சி ஆகும். கேரளாவில் மத தீவிரவாத அரசியல் தழைத்து வளர்ந்துவருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் நடந்த மத தீவிரவாத அரசியலுக்கு தடைவிதித்தது நரேந்திர மோடி அரசாகும். பாப்புலர் பிரண்ட்க்கு எதிராக கேரள அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. கேரளாவில் அவர்களின் செயல்பாடு உள்ளது. கேரளாவின் உள்ளிலும், வெளியிலும் அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தது பா.ஜ.க அரசு ஆகும்.

காங்கிரஸுக்கு மாற்றாக சி.பி.எம் கூட்டணி என மாற்றத்தைக் கொண்டுவருகிறீர்கள். வளர்ச்சி வேண்டுமானால் பா.ஜ.க-வை ஆதரித்து வளர்ச்சியை கொண்டுவர கேரள மக்களை வேண்டுகிறேன். பா.ஜ.க வட இந்தியா கட்சி என்று சி.பி.எம், காங்கிரஸ் கட்சியினர் சாதாரணமாக கூறி வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் பா.ஜ.க ஆட்சி செய்கிறது. திரிபுராவில் இடதுசாரிகளை மண்ணைக் கவ்வச் செய்து பா.ஜ.க ஆட்சி செய்கிறது. ஒடிஷா-வில் பா.ஜ.க ஆட்சி செய்கிறது. தெலங்கானாவில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்குப்பின் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ஆட்சி அமைக்க உள்ளோம். ஒடிசாவில் நாம் ஆட்சி அமைக்க முயன்றபோது அவர்கள் கிண்டல் செய்தார்கள். இப்போது ஒடிசாவில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. அசாமில் ஆட்சி அமைக்க முயலுவோம் என்றபோது கிண்டலடித்தார்கள். இரண்டு முறை அங்கு ஆட்சி அமைத்துள்ளோம். கேரளா மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். 2018 தேர்தலில் 11 சதவிகிதம் வாக்கு தந்தீர்கள், 2019-ல் 16 சதவிகிதம், 2024-ல் 20 சதவிகிதம் வாக்கு அளித்தீர்கள். இதோ கேரளாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வர உள்ளது. 2026- சட்டசபை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும் தேர்தலாக இருக்கும். பா.ஜ.க தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோரை கொலை செய்தது இடதுசாரி கட்சி. அப்போது கேரளாவில் ஆட்சி அமைப்பதுதான் லட்சியமாக இருந்தது. கேரளாவில் வரும் உள்ளாட்சி தேர்தலில் 21,000 வார்டுகளில் போட்டியிடும் பா.ஜ.க 25 சதவிகிதம் வாக்குகளை பெறும்.

சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகள் ஊழல் செய்வதை லட்சியமாக கொண்டுள்ளன. கூட்டுறவு வங்கி ஊழல், எக்ஸாலாஜிக், லைஃப் மிஷன் ஊழல், கே போன், பி.பி.இ கிட் ஊழல்களை சி.பி.எம் செய்துள்ளது. இந்த நாட்டில் நடந்த மிகப்பெரிய ஊழல் தங்கம் கடத்தல்தான் என்பதை பினராயி விஜயன் மறக்க வேண்டாம். காங்கிரஸ் கூட்டணி ஊழலில் சளைத்தவர்கள் அல்ல. பார் ஊழல், சோலார் பேனல் மோசடி, பாலாரிவட்டம் பாலம் ஊழல் ஆகியவை அவர்கள் காலத்தில் நடந்துள்ளது. காங்கிரஸ் இழுத்துமூடப்பட உள்ள கட்சியாகும். நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கூட சொல்ல முடியவில்லை. பா.ஜ.க இல்லாமல் வளர்ச்சியான கேரளம் சாத்தியம் அல்ல. விழிஞ்ஞம் துறைமுகம் உள்ளிட்டவைகள் மூலம் கேரளா வளர்ச்சிக்கு வித்திட்டார் பிரதமர் மோடி” என்றார்.