
சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழகம் வரும் 20 சாலை வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வருவோருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவும், தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.