
சென்னை: உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, சுகாதாரத் துறை சார்பில் பேரணி, விழிப்புணர்வு போட்டி, கருத்தரங்கம் நடைபெற்றன.
39-வது உலக மக்கள்தொகை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, செம்மொழி பூங்காவில் விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. பின்னர், அமைச்சர் தலைமையில்அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கருத்தரங்கம் நடந்தது. இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நல கையேடு, குடும்பநல விளக்க கையேடுகளை வெளியிட்ட அமைச்சர், விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற செவிலிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்களை வழங்கினார்.