• July 12, 2025
  • NewsEditor
  • 0

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியான `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா’ நடைபெற்றது.

மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு.வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வேள்பாரி வெற்றிப் பெருவிழா

நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநில நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன், “இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுவது ஒரு விபத்துதான் என்று சொல்ல வேண்டும். சில தினங்களுக்கு முன்பு எனக்கு சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.

அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றேன். அப்போதுதான் விகடனிடமிருந்து அழைப்பு வந்தது.

`வேள்பாரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்’ என அழைத்திருந்தார்கள். நானும் `சரி’ என்று கூறிவிட்டேன். அதன்படிதான் வந்திருக்கிறேன்.

`வேள்பாரி’ என்ற சொல்லுக்கு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு நபரின் மதியை மயக்கி வரவழைக்கும் வல்லமை இருக்கிறது.

இந்த `வேள்பாரி’ கரு உருவானதிலிருந்து, ஆசிரியருடனான உரையாடலுடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

“தனக்கான நாயகர்களை வரலாறே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது!’’

ஒரு படைப்பு எப்போது வெற்றி பெறுகிறது என யோசித்துப் பார்த்தால், அந்தப் படைப்பின் தேவை நிறைவேறும்போது அது வெற்றிபெறுகிறது. வரலாறு, தன்னுடைய நாயகர்களைத் தானாகவே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.

வரலாறும் சமூகமும் தன் தேவை என்ன என்பதை முடிவுசெய்து, அதற்கான படைப்பை, எழுத்தாளரை, பொருளை, தலைவரைத் தேர்வு செய்துகொள்ளும்.

அதற்கு வரலாற்றில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்கு முன்னாள் வின்சன்ட் சர்ச்சில், `அரசியலிருந்து விலகப்போகிறேன்’ என்றார்.

அப்போது சேம்பர்லின் என்பவரால் தேசிய அரசியலை நடத்த முடியாமல், இவரின் கரங்களுக்கு வருகிறது. அதன் பிறகு இரண்டாம் உலகப் போர் வருகிறது. அதில் இங்கிலாந்து வெற்றிபெறுகிறது.

ஆனாலும், அதற்குப் பிறகு நடந்த தேர்தலில் வின்சன்ட் சர்ச்சில் தோல்வியைத் தழுவுகிறார். அவர் மீண்டு வருவதற்குச் சில வருடங்கள் ஆகின்றன.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் - வேள்பாரி வெற்றிப் பெருவிழா
உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் – வேள்பாரி வெற்றிப் பெருவிழா

வரலாறு அப்படித்தான் தனக்கானவரைத் தேர்வு செய்துகொள்ளும்.

`அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் சுருதி பேதம் என்ற முத்திரையோடு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர், `தப்புத்தாளங்கள்’ என்ற வழியில், `முள்ளும் மலரும்’ எனக் கூறி, தமிழ்த் திரையுலகின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் இந்த உதாரணம் இன்னும் நன்றாகப் புரியும்.

`வேள்பாரி’யின் வெற்றியைத் தமிழ்ச் சமூகத்தின் ஏக்கம், எதிர்பார்ப்புகள் என்ன என்பதைக் கடந்த 10 ஆண்டுகளை கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். தமிழ்ச் சமூகம் தன் மொழியையும் பண்பாட்டையும் மீட்கத் துடிக்கும். அதற்கு உறுதுணையாக `வேள்பாரி’ இருந்ததால், அந்த வெற்றிப் பயணத்தை புரிந்துகொள்ளலாம்.

“5,200 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பைப் பயன்படுத்திய தமிழர்கள்!’’

எனக்கும் சு.வெங்கடேசனுக்கும் இடையேயான நட்பு 2006-ம் ஆண்டிலிருந்து தொடங்கியது. நான் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இலக்கிய நண்பராக அவர் அறிமுகமானார்.

தமிழ்ச் சமூகத்தின் மீது இருந்த கலங்கத்தைத் துடைக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தலை நடத்தினோம்.

அவரும், அவரின் தோழர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். இரவு 12, 1 மணி வரையெல்லாம் நாங்கள் விவாதித்திருக்கிறோம்.

அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வு செய்துகொண்டிருந்தபோது கீழடிக்கு என்னை அழைத்துச் சென்றார். சங்க இலக்கிய காலத்தில் மக்கள் பயன்படுத்திய அஞ்சனக்கோல் உள்ளிட்ட பொருள்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அப்போது வயதான ஒருவர் அந்தப் பகுதியில் சுற்றியபடி, அங்கிருக்கும் பொருள்கள் குறித்து விளக்கமளித்துக்கொண்டிருந்தார். அவர் பெயர் பாலசுப்ரமணியன். கீழடி பள்ளியின் தலைமையாசிரியர்.

ரஜினிகாந்த் - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் - வேள்பாரி வெற்றிப் பெருவிழா
ரஜினிகாந்த் – உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் – வேள்பாரி வெற்றிப் பெருவிழா

`இந்த இடத்தை 25 வருடங்களுக்கு முன்னாலேயே கண்டுபிடித்துவிட்டேன். அப்போதே மத்திய அரசுக்கும், தமிழக தொல்லியல்துறைக்கும் கடிதம் எழுதினேன்.

இப்போதுதான் வந்து அகழாய்வு செய்கிறீர்கள்’ என்றார். நான் அகழாய்வு செய்யும் பணிக்குச் சென்றபோது மாணிக்கம் என்பவரைத் தேடிச் சென்றேன். அவர், முதுமக்கள் தாழி இருந்த இடத்தில் இருந்தார்.

அங்கிருந்த முதுமக்கள் தாழியில் இருந்த ஒரு கனிமப் பொருள் இரும்பு. சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்திய செய்தி உலகை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு தமிழ் ஆசிரியர் அனுப்பிய குறுஞ்செய்திதான் இந்தக் கண்டுபிடிப்பின் பின்னணி.

“தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் படைப்பு வேள்பாரி!’’

எனக்கொரு மருத்துவ நண்பர் இருக்கிறார். என் மருத்துவ சோதனை முடிவுகளை விசாரித்த பிறகு அவர் என்னிடம் விசாரித்தது கீழடி குறித்துத்தான்.

எனவே, தமிழாசிரியர் முதல் மருத்துவர் வரை எல்லோரும் ஒரே அலைவரிசையில் இருக்கிறோம்.

அதுதான் இந்த `வேள்பாரி’க்கு கிடைத்த வெற்றி. திரைமொழிக்குச் சிறப்பான, மிக நெருக்கமான புதினம் இந்த `வேள்பாரி.’

தமிழர்களின் மெய்யியல் குறித்து விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழர்களின் அறத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பு இந்தப் புதினத்துக்கு உண்டு.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் - வேள்பாரி வெற்றிப் பெருவிழா
உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் – வேள்பாரி வெற்றிப் பெருவிழா

வரலாறு என்றால் வெற்றிபெற்றவர்கள் குறித்து மட்டும்தான் இருக்கும். அதில் வீழ்த்தப்பட்ட நபர்களுக்கு அதிகம் இடமிருக்காது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டு, அங்கு ஆமணக்கு விதைக்கப்பட்டதை, கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டதைப் பெருமையாக எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், வீழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை, வலியை மக்கள் தாங்கிப் பிடிக்கிறார்கள்.

அதனால்தான் அவர்கள் தொடர்பான வாழ்க்கையைப் பாடல்கள் வழியாகப் பதிவுசெய்கிறார்கள்.

அது போன்றதோர் அழகிய புதினம்தான் `வேள்பாரி.’ தமிழ்நாட்டில் சிறந்த படைப்பு அதிகம் பேரைச் சென்றடைந்து, வணிக வெற்றி பெற்று, காலத்தைக் கடந்து வென்றிருக்கிறது `வேள்பாரி.’

தமிழர்கள் பெருமிதத்தோடு, தங்களின் மொழியில் வெளிவந்த நவீன பெருமிதம் மிக்க படைப்பு என்று சொல்லக்கூடிய படைப்பு வேள்பாரி” என்றார்.

வேள்பாரி Audio Formatல் கேட்க :

https://play.vikatan.com/Velpari-audio-book

வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்

https://tinyurl.com/Velpari-Books

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *