
சென்னை: வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு குறித்து துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வேதனை தெரிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் அண்மையில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் முடித்து வைக்கப்பட்டது.
இருப்பினும் அது தொடர்ந் ததாகவே தெரிகிறது. இது பொதுச்செயலாளர் வரை மீண்டும் சென்ற நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் ஒப்பிட்டுப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பூந்தமல்லியில் நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மல்லை சத்யாவின் புகைப்படம் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தது.