
சமூக ஊடகங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்ஸரான சதீஷ், ‘டாட்டூ’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் தனது மனைவி தீபாவுடன் இணைந்து வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சதீஷ். இவரது நகைச்சுவை மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான ரீல்ஸ் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், ‘டாட்டூ’ திரைப்படம் அவரது முதல் திரைப்பட அறிமுகமாக அமைந்துள்ளது.
‘டாட்டூ’ திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி, அவரது சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சதீஷ் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்” அன்பு நண்பர்களே, இந்தப் பெரிய தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது நான் மிகவும் நெகிழ்ச்சியடைகிறேன் . எனது முதல் திரைப்படமான ‘டாட்டூ’வின் முதல் போஸ்டர் இதோ! இந்தப் படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்தத் திரைப்படம் என் இதயத்துக்கு மிக நெருக்கமானது. இதன் கதையில் பணியாற்றியது முதல், திரைக்கதையில் ஈடுபட்டது வரை, நான் முழு ஆர்வத்துடன் உழைத்தேன்.
ஒரு சாதாரண மனிதனாக இருந்து, யூடியூபராகவும், இன்ஃப்ளூயன்ஸராகவும் மாறி, இப்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது எனது பெரிய கனவாக இருந்தது. அந்தக் கனவு இப்போது நனவாகியுள்ளது. நீங்கள் இதுவரை எனக்கு அளித்த ஆதரவைப் போலவே இந்தப் படத்தையும் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களது ஆதரவு இல்லாமல் நான் இன்று இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். மனமார்ந்த நன்றி!
இயக்குநர் வேணுதேவராஜ் அவர்களுக்கு எனது சிறப்பு நன்றி. என்மீது நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தில் என்னை இணைத்ததற்கு நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.
சதீஷின் இயல்பான நடிப்பு மற்றும் அவரது தனித்துவமான பாணி இப்படத்தில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணிக்கும் சதீஷின் இந்த முயற்சி, புதுமுகங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.