
வேலூரின் அடையாளமாக விளங்கக்கூடிய வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வேலூர் கோட்டையை முழுவதுமாக சுற்றி வர கோட்டை சுற்று சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின் அருகிலேயே பாதசாரிகள், சுற்றுலா பயணிகள், பொது மக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைபாதை, கோட்டை சுற்று சாலையின் அருகிலேயே சுமார் 800 மீட்டருக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வேலூர் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள பகுதியில் நடைபாதை சிலாப் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
வேலூர் மீன் மார்க்கெட் பகுதிக்கு எதிரில் உள்ள நடைபாதை சிலாப் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி பொது மக்கள், “வேலூர் கோட்டையை சுற்றியுள்ள சுற்றுச்சாலையின் அருகே அமைந்துள்ள இந்த நடைபாதையை தினந்தோறும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
காலை நேரங்களில் நடைபயிற்சி செய்பவர்களையும் இங்கு பார்க்க முடியும். இப்படி எப்போதும் இந்த நடைபாதை பொது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வேலூர் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள நடைபாதையில் சிலாப் உடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பள்ளத்தில் யாரும் தவறுதலாக விழுந்துவிடக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக இரண்டு குச்சியை நட்டு, கயிறு கட்டி சென்று உள்ளனர்.
எனவே இது போன்ற அலட்சிய பணிகளில் ஈடுபடாமல், முறையாக உடைந்த சிலாப்பை அகற்றிவிட்டு புதிய சிலாப் அமைத்து சீர் செய்ய வேண்டும். அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கோட்டைக்கு மிக அருகாமையில் இது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து இந்த பணியை முடிக்க வேண்டும்” என்றனர்.
ஆபத்தான நிலையில் சிலாப் உடைந்த பகுதியை இரண்டு குச்சி மற்றும் கயிறு கொண்டு தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்துவதற்கு பதிலாக… முறையாக இந்த நடைபாதையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுப்பார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள்?