• July 11, 2025
  • NewsEditor
  • 0

தாய் சேய் இறப்பு விகிதம் (MMR) ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மையின் முக்கிய அளவுகோலாகும். இந்தியாவில், தாய் சேய் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், பொது சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள  நேர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. 

இந்தியாவின் தேசிய MMR 2014-16 இல் ஒரு லட்சம் குழந்தைகளில் 130 இறப்பாக ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2020-22 இல் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 88 ஆகக் குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2023 இல் இது ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 80 ஆக மேலும் குறைந்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் உயிருள்ள குழந்தைகளுக்கு  இறப்பு விகிதம் 70 என்ற நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கு இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

இந்தியாவிற்கே தமிழ்நாடு இந்த முன்னேற்றத்தில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் MMR 2018-20 இல் 54 ஆக இருந்து, 2023-24 இல் 45.5 ஆகக் குறைந்துள்ளது. இது தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதோடு, SDG இலக்கையும் ஏற்கனவே அடைந்துவிட்டது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இரத்தப்போக்கு போன்ற பொதுவான காரணிகளைக் கண்டறிந்து நிர்வகிப்பதில் நமது மாநிலத்தின் மிக கவனமாக இலக்கு சார்ந்து செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து பல புதுத்தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி இந்தியாவிற்கே ஏன் உலகத்திற்கு புது மாதிரியாக விளங்கிவருகின்றன. இதனால் ஆரோக்கியமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் எதிர்காலத் தலைமுறைக்கு அடித்தளமிடுகிறார்கள்.  சமூக ஸ்திரத்தன்மையை அதிகரிக்கிறது. தாய் சேய் நலன் சார்ந்த டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.  இது சமூக நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டிலின் மதுரையில் இருந்து JioVio Healthcare நிறுவனத்தின் சேவ்மாம் (Save Mom) எனும்   அணியக்கூடிய கருவிகள் (Wearable Device) ஒன்றை பொருத்தி அதன் வழியே கர்ப்பிணி தாய்மார்களின் உடல் நலத் தகவல்களைத அவ்வப்போது அதற்கான மென்பொருளில் பதிவதால் மருத்துவர்கள் கண்காணிப்பில் கர்ப்பிணி தாய்மார்கள் இருப்பார்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அவர்களுக்கு துல்லியமான கண்காணிப்பை வழங்கி குழந்தை பிறப்பதை மகிழ்ச்சியாக அதே சமயம் ஆரோக்கியமாக பிறக்கவைக்கவேண்டும் என்பதில் கவனமாக செயல்படுகிறார்கள். அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செந்தில்குமார் முருகேசன் அவர்களிடம் சேவ் மாம் வளர்ந்த கதையை கேட்போம்…

“தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடல்நலத்தில் உள்ள குறிப்பிட்ட இடைவெளிகள் அல்லது சவால்களில் எவை உங்களை இந்த தீர்வை உருவாக்க ஊக்கப்படுத்தின? இந்த யோசனையைத் தூண்டிய தனிப்பட்ட அல்லது களப்பணி அனுபவம் ஏதேனும் இருந்ததா?”

“வணக்கம், என்னோட பேரு செந்தில்குமார். நான் சேவ் மாம் (SAVE MOM) நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறேன், சேவ் மாம் (SAVE MOM) கர்ப்பமான பெண்களுக்கு அணியக்கூடிய ஒரு கருவியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக்கொண்டு உருவாக்கியிருக்கிறோம்.

அதன் வழியாக உலக சுகாதார மையம் அனுமதித்துள்ள சில உடல்நலம் சார்ந்த தகவல்களைப் பெற்று கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமாக குழந்தை பிறக்க தொழில்நுட்பம் வழியே உதவுகிறோம்.

சேவ் மாம் (SAVE MOM) ஐடியா வர காரணம் என் சகோதரி, முதன்முதலில் அவர்கள் கர்ப்பிணி ஆனபோது அவர்களிடமிருந்துதான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது.

நான் அவங்ககிட்ட கவனித்தது என்ன அப்படின்னா, ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனைக்குப் போறாங்க, அப்போ மருத்துவரைப் பார்க்க போகும்போது குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் காத்திருக்கவேண்டியதிருக்கும், அப்படின்னா ஒரு 70, 80 கர்ப்பமான பெண்கள் காலைல 9 மணிக்கு வராங்க.

மத்தியானம் 3 மணி வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அப்ப எனக்குத்தோன்றியது என்னோ தொழில்நுட்பம் வழியாக அவர்கள் பரிசோதனையை உடனுக்குடன் மருத்துவருக்குத் தெரியப்படுத்தினால் என்ன ?என்று தோன்றியது. ஏன்னா நான் செமி கண்டக்டர் துறையில் வேலை பார்த்திருக்கிறேன், எங்கத்துறையில் எல்லா விஷயத்தையும் வந்து நிறைய ஆட்டோமேஷன் பண்ணுவோம்.

தொடர்ந்து திரும்பப் பயன்படுத்தும் விஷயங்களுக்கு ஆட்டோமேஷன் பண்ணுவோம். ஆனா மருத்துவத்துறையில் அப்படியில்லை, எனவே ஏன் இப்படி செய்யக்கூடாதுன்னு என தோணுச்சு, ஆனால் இதற்காகவே உலக சுகாதார மையம் கர்ப்பிணிப் பெண்களிடம் சில தகவல்களை எடுக்கும் வழிவகை செய்திருந்தது, எனவே அதை மையமாக வைத்தே செயல்பட்டோம்.

என்னோட முக்கிய இலக்கு என்னவா இருந்தது என்றால் கர்ப்பிணித் தாய்மார்கள் ஒரு மணி நேரத்துக்குள்ள பரிசோதனை முடிச்சுட்டு வீட்டுக்கு போயிரணும்.

அந்த மாதிரி பண்ண முடியுமா அப்படின்றதுக்குதான் இந்த சேவ் மாமை (SAVE MOM) நான் முதல்முதலில் ஆரம்பித்தேன்.”

“பிரச்னை தெளிவாக இருந்தபோது,உங்கள் தீர்வுகளுக்கு இந்தியாவில் என்ன மாதிரியான வாய்ப்புகள் இருந்தது?”

“இதுல இன்னொரு பெரிய பிரச்சனை என்ன அப்படின்னா, உலக சுகாதார மையம் (WHO) கர்ப்பமான தாய்மார்கள் தொடர்ந்து மாதம் மாதம் பரிசோதனைக்கு வரணும் அதாவது எட்டு செக்கப் கண்டிப்பா வந்துரணும் அப்படின்றதுதான் WHO-வோட பரிந்துரை.

அவங்க சரியா பரிசோதனைக்கு வந்துட்டாங்க என்றால் அப்போது தாய்/சேய் ஏதாவது பிரச்னை என்றால் நம்ம முன்னாடியே கண்டுபிடித்து அதற்கான மாற்றைத் தேடலாம். அதேபோல் பிரசவத்துக்கு முன்பு ஏதேனும் பிரச்சனை இருந்தால் முன்னாடியே கண்டுபிடிச்சுரலாம்.

ஆனால் இந்தியால என்ன பிரச்சனை நடக்குது என்றால், கர்ப்பமான பெண்கள் மூணு பரிசோதனைக்கு மேல வரமாட்டேன்றாங்க. அது என்னன்னா அரசின் பதிவு ஏட்டில் பதிவு பண்றதுக்கு வராங்க, அதுக்கடுத்து பிரசவத்துக்குத்தான் வராங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன நடந்தாலும் தெரிய மாட்டேங்குது.

நிறைய மலைவாழ் மக்கள், கிராம மக்களை எல்லாம் பார்க்கும்போது இந்த பரிசோதனை எண்ணிக்கை ரொம்ப ரொம்ப குறைவா இருக்கு.

சோ, என்னோட சகோதரியை வைத்து இந்த தொழில்நுட்பத்தை ஒரு முன்னோடி திட்டமா உருவாக்கினேன்.

இந்தியாவில் பிரசவத்தின்போது தாயோ அல்லது சேயோ இறக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகத்துலயே இந்தியாலதான் அதிகமான குழந்தைகள் பிறக்குது.

அதே சமயம் பிரசவ இறப்பைக் குறைப்பதுதான் என்னோட நோக்கமா இருந்தது. சில மலை கிராமத்துல போய் மக்களிடம் பேசும்போது எனக்கு ஒரு விஷயம் புரிந்தது.

என்னன்னா இந்த பரிசோதனைக்கு நான் மருத்துவமனைக்கு வீட்ல இருந்து ஒரு 30-60 கிலோமீட்டர் பயணிக்கணும். எப்படியிருந்தாலும் ஒரு எட்டு மணி நேரம் ஆயிடுது.

நான் வீட்டுக்கு வந்துட்டேன்னா எங்க வீட்ல வந்து குழந்தைய பாத்துக்கறதுக்கோ அல்லது சாப்பாடு பண்றதுக்கோ யாருமே இல்லை.

அப்போ ஒரு நாள் முழுதா குழந்தைங்க சாப்பிடாம இருக்க வேண்டியதா இருக்கு. அதனால அவங்க குழந்தைகளுக்காக தங்களோட பரிசோதனைகளை தவிர்க்கறாங்க.

அதனால் இந்த பிரச்சனையை நான் முழுதாக புரிந்துகொண்டேன். என்னோட சகோதரிக்கு செய்த மாதிரி, ஒரு மணி நேரத்துக்குள்ள இந்த செக்அப்ப பண்ணி முடிச்சிட்டால் அவங்களால வீட்டுக்கு போக முடியும்.

அவங்களால தொடர்ந்து எல்லா மாதமும் பரிசோதனைக்கும் வர முடியும். அப்படி யாராவது பெண்கள் செக்கப்புக்கு வர மிஸ் பண்ணிட்டா கூட, எங்க தொழில்நுட்பத்த வச்சு அவங்க வீட்டுக்கு போயே இந்த பரிசோதனை கொடுக்குற அளவுக்கு ஒரு நுட்பமான மாடலைதான் நாங்க உருவாக்கினோம்.”

“கிராமப்புறங்களில் அல்லது சேவை குறைவாக உள்ள பகுதிகளில் உங்கள் தீர்வை அமல்படுத்தும்போது நீங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய தடைகள் எவை, அவற்றை எவ்வாறு சமாளித்தீர்கள்?”

“நாங்கள் கிராமங்களில் பணிபுரியும்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். அங்கு எங்களின் திட்டங்களுக்கு ஏற்புத்தன்மை மிகக் குறைவாக இருந்தது.

இருப்பினும், நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, அங்குள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் பேசி, திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினோம். இவ்வாறு செயல்படும்போது பல சவால்களைச் சந்தித்தோம்.

முதலாவதாக, ஒரு தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க வேண்டியிருந்தது. கிராமங்களில் நாங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைக்கு வராததுதான்.

உதாரணமாக, இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஒரு தாயின் வீட்டிற்குச் சென்று விசாரித்தோம்.

முதல் குழந்தை என்ன ஆனது என்று கேட்டபோது, ஏழாவது மாதத்தில் குழந்தையின் இதயத்துடிப்பு நின்று குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இது அவர்களுக்கு இரண்டாவது குழந்தை.

என்ன காரணத்தால் குழந்தை இறந்தது என்பதை அறிய, அவர்கள் குறிப்பிட்ட அடிப்படை சுகாதார நிலையத்திற்குச் சென்று பார்த்தோம்.

அங்கு பார்த்தபோது எங்களுக்குப் பேரதிர்ச்சி ஏற்பட்டது. அங்கு எம்.சி.பி எனப்படும் ஒரு அட்டை இருந்தது. இதைத் தாய் அட்டை என்று சொல்வார்கள்.

இந்த அட்டையில், ஒரு பெண் எப்போது கர்ப்பமானார், குழந்தை எப்போது பிறந்தது, எத்தனை முறை பரிசோதனைக்கு வந்தார், ஒவ்வொரு பரிசோதனையிலும் அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் எப்படி இருந்தன என்பவை அனைத்தும் முழுமையாகப் பதிவு செய்யப்படும். ஆனால் அந்தப் பெண்ணின் சில தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்குத் தொடர்ந்து வருவதில்லை. ஆனால் அரசுக்கு இந்தப் பெண்கள் தொடர்பான தகவல்கள் தேவைப்படுகின்றன.

இந்தத் தகவல்களை அளித்தால் அரசு அவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இதனால் சுகாதாரத் துறையில் உள்ளவர்கள், எல்லாத் தகவல்களையும் முழுமையாகப் பதிவேற்ற வேண்டியது மிக அவசியம்.

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அரசு நிறைய மானியங்கள், உதவிகள், ஊட்டச்சத்துப் பொருட்கள் எனப் பலவற்றை வழங்குகிறது.

ஆனால், தாங்கள் வழங்கும் உதவிகள் இந்த பெண்களுக்கு உண்மையாகவே சென்றடைகிறதா என்பதைச் சரிபார்க்க எந்த ஒரு தொழில்நுட்பமும் அரசிடம் இல்லை. தகவல்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டாலும் அவர்களுக்குத் தெரியாது.

இதற்கு ஒரு யோசனையை நாங்கள் சிந்தித்தோம். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ஒரு அணியக்கூடிய கருவியைக் (wearable device) கொடுப்போம்.

இந்தக் கருவி ஒரு மாதம் முழுவதும் அவர்களின் உடல்நலத் தகவல்களை முழுமையாகக் கண்காணிக்கும்.

அவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது, அங்கு ஒரு கியாஸ்க் (kiosk) போன்ற அமைப்பை நாங்கள் நிறுவியிருப்போம்.

இந்தக் கருவியும், மருத்துவமனையில் உள்ள அமைப்பும் ஒன்றையொன்று சரிபார்த்து, உண்மையிலேயே இந்த பெண்தான் வந்திருக்கிறாரா என்பதை உறுதி செய்யும்.

முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் (face recognition technology) பயன்படுத்தி, அந்தப் பெண் உண்மையிலேயே வந்திருக்கிறாரா என்பதை நாங்கள் கண்டறிவோம்.

அதன் பிறகு, ஒரு மாதத்திற்கான அவர்களின் அனைத்து உடல்நலப் பதிவுகளும் அந்தக் கருவியிலிருந்து டிஜிட்டல் வடிவில் எங்களுக்குக் கிடைத்துவிடும்.

இதன் மூலம், யாரும் தகவல்களைத் தவறாகப் பதிவு செய்ய முடியாது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு வந்தால்தான் அவர்களின் தகவல்கள் கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது.

டாக்டர் கொடுக்கும் எல்லா மருத்துவத் தகவல்களையும் நாங்கள் டிஜிட்டல் மயமாக்கி அதற்கான ஊட்டச்சத்து அனைத்தையும் அவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம்.

ஒருவேளை இந்தத் தாய்மார்களால் வர முடியவில்லை என்றால், எங்கள் சிஸ்டம் ஒரு டாஷ்போர்டில் இந்த மாதம் இந்தப் பெண்கள் எல்லாம் வரவில்லை என்று தரவுகளை உருவாக்கிவிடும்.

இந்தத் தகவலை மீண்டும் கிராம அளவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு அனுப்பிவிடுவோம். இப்போது அவர்கள் அவர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அவர்களிடம் ஒரு மொபைல் போன் இருக்கும்.

அதனைக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்போது அந்தச் சாதனமும் அவர்கள் கையில் கட்டியிருக்கும் சாதனமும் அருகருகே இருந்தால் மட்டுமே அந்தப் பரிசோதனை நிறைவடையும்.

இதனை பிளாக் அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் நாங்கள் அப்டேட் செய்வோம்.

இந்த சிஸ்டத்தில் தகவல்களை நேரடியாக உள்ளிட முடியாது என்பதால், உண்மையிலேயே அந்தப் பராமரிப்பு அந்தப் பெண்களுக்குத்தான் கிடைத்தது என்பதை எங்களால் திறம்பட உறுதிப்படுத்த முடிந்தது. இதை நாங்கள் அங்கு வெற்றிகரமாகச் செய்தோம்.

நாங்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது பல்வேறு சவால்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு கைக்கடிகாரம் போன்ற கருவியைக் கொடுத்திருந்தோம்.

ஒரு மாதம் கழித்து அந்தக் கருவியில் பதிவான தரவுகளை நாங்கள் ஆராய்ந்தபோது, ஒரு நாளைக்கு 50,000 அடிகள் நடப்பதாகவும், பல தீவிரமான செயல்பாடுகளைச் செய்வதாகவும் தரவுகள் காட்டின.

ஆனால், அந்தப் பெண்கள் எட்டாவது மாத கர்ப்பிணிகளாக இருந்தார்கள். இதனால், அவர்கள் இவ்வளவு சிரமப்படுவதைக் கண்டு, அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க அவர்கள் கிராமத்திற்குச் சென்று, அவர்களின் வீட்டிற்குச் சென்று பேசினோம்.

அப்பொழுது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, நாங்கள் கொடுத்த அணியக்கூடிய கருவியை அவர்கள் பயன்படுத்தவே இல்லை.

அவர்களிடம் கேட்டபோது, “எங்கள் கணவர் அதைக் கொண்டு சென்றுவிட்டார். அவர் மலை மீது ஏறி இறங்குவார், ஒரு நாளைக்கு 10, 20 முறை ஏறி இறங்குவார்” என்று கூறினார்கள்.

இதனால், இந்தக் கருவியை அவர்களை எவ்வாறு பயன்படுத்த வைப்பது என்பது எங்களுக்குப் பெரும் குழப்பமாக இருந்தது.

ஏனெனில், இந்த அணியக்கூடிய கருவியை அறிமுகப்படுத்திய பின்னர்தான், அனைத்து தாய்மார்களும் சரியாகப் பரிசோதனைக்கு வருகிறார்கள் என்பதைக் கண்டறிய முடிந்தது. பதிவுகளை டிஜிட்டலாகப் பதிவு செய்ய முடிந்தது.

பதிவுகளை டிஜிட்டலாகப் பதிவு செய்வதால், மருத்துவமனையில் காத்திருக்கும் நேரம் கணிசமாகக் குறைந்தது. ஏனெனில், தரவுகள் டிஜிட்டலாக வந்துவிடுவதால், மருத்துவர் விரைவாகப் பரிசோதனையை முடிக்க முடிந்தது.

பெண்கள் அணியக்கூடிய கருவியைப் பயன்படுத்தாதபோது, சரியான தரவுகளைப் பெற முடியவில்லை என்பது எங்களுக்கு ஏற்பட்ட பெரிய பிரச்னை. அப்போது, அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் ஒரு யோசனையைச் சொன்னார்கள்.

“என் கழுத்தில் இருக்கும் தாலி கயிறு மட்டுமே எப்போது இருக்கும்” என்று சில தாய்மார்கள் கூறினார்கள். அப்போது எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது.

எங்கள் கருவியை தாலி கயிற்றில் இணைக்கும் வகையில் வடிவமைத்தால், சென்டிமென்டாகப் பெண்கள் அந்தக் கருவியை அகற்ற மாட்டார்கள், கணவரும் அந்தக் கருவியை எடுக்க மாட்டார் என்ற யோசனையைப் பயன்படுத்தி, அந்தக் கருவியை முழுமையாக மறுவடிவமைப்பு செய்தோம்.

அதை அவர்கள் தாலி கயிற்றில் இணைக்கும்படி செய்தோம். இதைச் செய்த பிறகு, அவர்களது அனைத்துத் தரவுகளையும் தொடர்ந்து வெற்றிகரமாகப் பதிவு செய்ய முடிந்தது.

இதுவே இந்தக் கண்டுபிடிப்பின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று. இதன் மூலம், அனைத்துப் பெண்களுக்கும் அரசு பரிந்துரைத்த எட்டு பரிசோதனைகளும் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்தோம்.

தரவுகள் நிகழ்நேரத்தில் வருவதால், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மருத்துவர்களுக்கு, 200 பெண்கள் இருந்தால், அவர்களில் யார் ஆபத்தான நிலையில் இருக்கிறார்களோ, அவர்களை முதல் முன்னுரிமையாகக் காட்டுவோம்.

அவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையிலிருந்து ஊட்டச்சத்து வழங்குவோம், மேலும் அந்த ஊட்டச்சத்தை அவர்கள் உண்மையிலேயே உட்கொள்கிறார்களா என்பதையும் கலாச்சார ரீதியாக கண்காணிப்போம்.

ஆனால், இங்கேயும் எங்களுக்கு மற்றொரு சவால் இருந்தது. எவ்வளவு ஊட்டச்சத்து கொடுத்தாலும், அதை அவர்கள் உட்கொள்ளவில்லை.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபத்தான நிலையில் உள்ள தாய்மார்களைக் கண்டறிந்துவிட்டோம், மருத்துவர்களைக் கொண்டு அவர்களுக்கு ஊட்டச்சத்தைப் பரிந்துரைக்கவும் செய்துவிட்டோம். ஆனால், ஊட்டச்சத்து கொடுத்தும் எந்த மாற்றமும் இல்லாததைக் கண்டு, மீண்டும் அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தோம்.

அப்போது எங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்னவென்றால், நாங்கள் கொடுத்த அனைத்து ஊட்டச்சத்துகளையும் அவர்கள் தண்ணீரில் கலந்து அங்குள்ள மாடுகளுக்கோ அல்லது ஆடுகளுக்கோ கொடுத்துவிடுகிறார்கள்.

ஏனெனில், அவை நிறைய பால் கொடுக்கும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். இதை எவ்வாறு தீர்ப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது ஒரு பெரிய அடுத்த பிரச்சனை.

ஏனெனில், நாங்கள் கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்தோம், அவர்கள் உட்கொண்டால்தான் அந்தப் பிரச்சனை தீரும். பின்னர், அவர்களிடம் விவாதித்து ஒரு யோசனை செய்தோம்.

நாங்கள் கொடுக்கும் ஊட்டச்சத்தை இரண்டு பைகளாகப் பிரித்துக்கொள்வோம். ஒன்று, அவர்கள் எப்போதும் போல வீட்டில் உள்ள மாடுகளுக்கோ அல்லது ஆடுகளுக்கோ கொடுக்கப்போகிறார்கள்.

மற்றொன்றை நன்கு பொடித்து அவர்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிட்டு வந்துவிடுவோம். இது எங்களுக்கு ஒரு பெரிய நன்மையாக இருந்தது.

ஏனெனில், இந்த கிராமங்களில் உள்ளவர்கள் எப்போதும் அவர்கள் குடிக்கும் தண்ணீரில் ஏதேனும் ஒன்றைப் போட்டுத்தான் குடிக்கிறார்கள். உதாரணமாக, ஏதேனும் ஒரு வேர் அல்லது இலையைப் போட்டுத்தான் குடிக்கிறார்கள்.

அப்போது எங்களுக்கு ஒரு யோசனை வந்தது. இவர்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் மூலமாகத்தான் ஊட்டச்சத்து கொடுக்கிறார்கள்.

அப்படியானால், நாம் இவர்களின் குடிக்கும் தண்ணீரில் ஊட்டச்சத்தைக் கொடுத்தால், அவர்கள் இயல்பாகவே அதை உட்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள் என்ற அணுகுமுறையில் செய்தோம்.

அது ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. இதைச் செய்தவுடன், பல ஆபத்தான நிலையில் உள்ள பெண்களின் ஹீமோகுளோபின் அளவு இயல்பு நிலைக்கு வந்தது.

அவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுத்தோம். எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றி என்னவென்றால், ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் சராசரி எடை கிட்டத்தட்ட 3.1 கிலோகிராமுக்கு மேல் இருந்தது.

அந்தக் கிராமத்தில் இதை ஒரு பெரிய கொண்டாட்டமாகவே கொண்டாடினர். அனைவரும் குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டாடினர். நானும் அங்கு இருந்தபோது என் கையிலும் கொடுத்திருந்தார்கள்.

பின்னர், நாங்கள் அந்தப் பொருளைப் பல மாநிலங்களில் செயல்படுத்தினோம். மலைவாழ் மக்களுக்கும், கிராமங்களில் உள்ளவர்களுக்கும் முதல் முன்னுரிமை அளித்தோம்.

கிட்டத்தட்ட 36,000 கர்ப்பிணித் தாய்மார்களை வெற்றிகரமாக இந்த 1000 நாட்கள் பராமரிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.

“கர்ப்பம் மற்றும் பிரசவம் போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களில் தொழில்நுட்பத்தை மனித அக்கறை தேவையும் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது? ”

“உண்மையில் எங்கள் நோக்கம் என்னவென்றால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு என தனியாக ஒரு தொழில்நுட்பம் ஒன்றை அணியக்கூடிய கருவியாக கொடுக்கிறோம். அவர்களுக்கு எனப் பிரத்யேகமாக உருவாக்குகின்றோம்.

இதன் வழியே உங்கள் மருத்துவர் தொடர்ச்சியாக கண்காணித்துக்கொண்டே வருவார். அதை அவருடைய கணவருக்கும் நாங்கள் தகவல் அளிக்கின்றோம், கிடைக்கின்ற தகவல்கள் எல்லாவற்றையும் அவருடைய கணவருக்கும் நாங்கள் பகிர்வோம்.

தாய்மார்கள் பிரசவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க அவர்கள் குழந்தையோட பேசுங்க.

உங்க டாக்டரும் உங்க கணவரும் எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள். தாய்மார்கள் பிரசவிக்கும்போது மகிழ்வாக, ஆரோக்கியமாக குழந்தையை பிரசவிக்க முடியும்.இதுதான் எங்கள் நோக்கம்.

பிரசவம்

ஏன்னா எல்லா கிராமத்திலும் கணவரிடம்தான் ஸ்மார்ட்போன் இருக்கும், அந்தந்த பிராந்திய மொழிகளில் கொடுப்போம் அதை நாங்க எப்படி டிசைன் பண்ணிருந்தோம்னா ஒரு குழந்தையே அப்பாகிட்ட அம்மாவைப் பத்தி பேச வைப்போம். அம்மா இன்னைக்கு வாமிட் எடுப்பாங்க, அவங்களுக்கு இந்த மாதிரி ஃப்ரூட்ஸ் வாங்கிக் கொடுங்க, அம்மாக்கு வந்து செக்கப்புக்கு கூட்டிட்டு போங்க, நீங்க கூட போங்க, இந்த மாதிரி எல்லாம் இன்ஃபர்மேஷன் கொடுக்கும்போது அது ஒரு கம்ப்ளீட் எக்கோசிஸ்டத்தை கிரியேட் பண்ணுது.

எங்களைப் பொறுத்தவரைக்கும் எங்கள் தொழில்நுட்பம் இன்னும் மனித அக்கறையை அதிகரிக்கும்.”

“இதுவரை தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் மீது உங்கள் தீர்வு ஏற்படுத்திய தாக்கத்தை நிரூபிக்கும் முடிவுகள் இருந்தால் பகிருங்களேன்.?”

“நாங்க ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு 36,000, இப்ப கிட்டத்தட்ட 40,000 பேர் வரை ஆராய்ச்சி நாங்க பண்ணிட்டோம்.

எங்களோட இந்த புத்தாக்கம் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்ல வந்து ஒரு கேஸ் ஸ்டடி ஆயிருக்கு. இந்தியாவிலேயே ஒரு இளம் கம்பெனி. ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்ல கேஸ் ஸ்டடி பண்ணப்பட்ட கம்பெனி வந்து சேவ்மாம் தான். அதுவும் இல்லாம மதுரையிலிருந்து கேஸ் ஸ்டடி ஆன இரண்டாவது நிறுவனம் நாங்க.

முதல் நிறுவனம் அரவிந்த் ஐ கேர். அதாவது இப்ப டெக்னாலஜி எவ்வளவோ வளர்ச்சி அடைந்திருக்கு. ஆனால் அதை பயனாளர்களை பயன்படுத்த வைப்பதுதான் ரொம்ப சவாலாக இருக்கு.

நிறைய பேர் சொல்லுவாங்க புதுசா வர டெக்னாலஜி 1% தான் அடாப்ஷன் லெவல் இருக்கு அப்படின்னு.

எங்களோட தொழில்நுட்பம் அரசின் திட்டத்தை உண்மையான அன்னையருக்கு கிடைச்சிருக்குன்றத கண்காணிக்கிறோம். அரசுக்கும் எங்களால தாய் சேய் இறப்பு விகிதத்தை இந்த தொழில்நுட்பத்தை வச்சு குறைக்க முடியுது.”

“இதுவரை தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் மீது உங்கள் தீர்வு ஏற்படுத்திய தாக்கத்தை நிரூபிக்கும் முடிவுகள் இருந்தால் பகிருங்களேன்.?”

“எங்கள் தொழில்நுட்பத்தின் உண்மையான தேவைகள் கிராமத்தில் இருக்கிற மக்கள்தான். ஏன்னா இன்டர்நெட் இப்ப எல்லாத்துக்கும் கிடைக்கிறது.

ஆனால் தேவைகேற்ப பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கலாச்சார ரீதியாக நாங்க வளர்க்கும் போது அதோட பயன்படுத்தும் விதத்தை எங்களால வேகமாக அதிகரிக்க முடியுது.

அதுதான் நாங்க சேவ்மாம்ஸ் நிரூபிக்க வேண்டியது. எங்களோட தொழில்நுட்பம், அரசின் திட்டத்தை உண்மையான அன்னையருக்கு அவங்களுக்குதான் கிடைச்சிருக்குன்றத கண்காணிக்கிறோம்.

அரசுக்கும் எங்களால தாய் சேய் இறப்பு விகிதத்தை இந்த தொழில்நுட்பத்தை வச்சு குறைக்க முடியுது.

அதாவது சுகாதாரம், நான் சொன்ன மாதிரிதான் தொழில்நுட்பம் வந்து ரொம்ப முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நிறைய பேருக்கு என்னன்னா அதை எப்படி, எங்கு பயன்படுத்த வேண்டும் என்று கூட நிறைய தெரியவில்லை.

குறிப்பாக சுகாதார மற்றும் ஆரோக்கியத்துறையில் மட்டும்தான் இன்னும் தொழில்நுட்பத்திற்குள் அதிகம் நுழையாக ஒரு துறையாக இருக்கிறது.

இப்போது நீங்கள் வங்கித் துறையை எடுத்துக்கொள்ளுங்கள், நாம் எல்லாமே டிஜிட்டல் தனிப்பயனாக்கப்பட்ட நிலையில் வந்துவிட்டது வங்கித் துறை. கல்வி முதற்கொண்டு டிஜிட்டலாக வந்துவிட்டது. ஆனால் ஆரோக்கியம் மட்டும் இன்னும் டிஜிட்டலாகவில்லை.

ஆகவே, நிறைய புதிய நிறுவனங்கள் சுகாதாரத்தில் இருக்கிற சின்ன சின்ன பிரச்சனைகளைத் தொழில்நுட்பத்தோடு தீர்க்கும் போது நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

ஏனென்றால் நாம் சம்பாதிப்பது எல்லாமே வந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்காகத்தான். சரி, அதுவும் இல்லாமல் குழந்தை பிறப்பது என்பது வாழ்க்கையில் ஒரு முறை அல்லது இரண்டு முறை நடக்கக்கூடிய விஷயம்.

ஆகவே இதில் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்து அதை பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவது வந்து எங்களுக்கும் அது ரொம்ப திருப்தியாக இருக்கிறது.

இதை இன்னும் நாங்கள் இன்னும் நிறைய இதில் புதிய புதுமைகளைச் செய்கிறோம். நாங்கள் இப்பதான் குழந்தைக்குத் தொடங்கியிருக்கிறோம்.

குழந்தை பிறப்பதையும், பிறந்த குழந்தையையும் கண்காணிப்பது புதுமைகளை இங்கு செய்துகொண்டிருக்கிறோம்.”

“இந்த மாதிரியை இந்தியா முழுவதும் அல்லது உலகளவில் விரிவாக்குவதை எவ்வாறு கருதுகிறீர்கள், அதை சாத்தியமாக்க எந்த வகையான ஒத்துழைப்பு அல்லது ஆதரவு தேவைப்படும்?”

“எங்களது ஒரு முக்கியமான குறிக்கோள் என்னவென்றால், ஒரு குழந்தை ஒரு பணக்காரத் தந்தைக்கு அல்லது ஏழைத் தந்தைக்குப் பிறக்கிறது என்றால், முதல் 1000 நாட்களுக்கு அந்தக் குழந்தைக்கு அது தெரியவே கூடாது.

அது பணக்காரத் தந்தைக்குப் பிறந்திருக்கிறதா, ஏழைத் தந்தைக்குப் பிறந்திருக்கிறதா? என்பதெல்லாம் விசயமாக இல்லை.

குழந்தையின் 1000 நாள் பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் உலகம் முழுவதும் எல்லா அரசுகள், எல்லா நிறுவனங்களின் முக்கியமான குறிக்கோள் அந்தக் குழந்தைக்கு சிறந்த சுகாதாரப் பாதுகாப்பைக் கொடுப்பதுதான். அதைக் கொடுக்க விரும்புவது சேவ்மாம்தான்.

ஆகவே அதை அடுத்த வர இரண்டு வருடங்களுக்கும் கொடுக்க வேண்டும். அந்த 1000 நாட்களை சிறப்பான பராமரிப்பாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது முக்கிய குறிக்கோள்.

நாங்கள் இந்த புதுமையை பழங்குடி நிலையில், கிராமப்புற நிலையில் தொடங்கியது ஏன் என்றால், அடிப்படைப் பிரச்சனையை அடையாளம் காண்பதற்குத்தான்.

ஒருமுறை நீங்கள் இங்கு தீர்த்துவிட்டீர்கள் என்றால் அந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்படலாம் அல்லது விரிவுபடுத்தப்படலாம். இந்தியாவில் மட்டும் பார்த்தீர்கள் என்றால் இரண்டரை கோடி குழந்தைகள் ஒரு வருடத்திற்குப் பிறக்கிறார்கள்.

எங்களது முதல் குறிக்கோள் அந்த இரண்டரை கோடி குழந்தைகளும் முதல் 1000 நாட்களுக்கு மிகவும் மேம்பட்ட சிறந்த பராமரிப்பு கிடைக்கணும்.

அந்தக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அம்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது அவர்களுக்கு சிக்கலாக மாறக்கூடாது. அது எங்களது குறிக்கோள்.

இதே தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் நாங்கள் கொண்டு போவதையும் யோசித்துக்கொண்டிருக்கிறோம். அமெரிக்காவிலும் இதே போன்ற பிரச்சனைகள் இருப்பதால் அங்கேயும் எப்படி விரிவுபடுத்துவது என்பதையும் நாங்கள் நிறைய பங்குதாரர்களுடன் விவாதித்து வருகிறோம்.”

“சமீபத்தில் கூகுள் நிறுவனம் உங்களை அமெரிக்க தலைமை அலுவலகத்துக்கு அழைத்தது, அமெரிக்காவில் என்ன நடந்தது? அனுபவங்களை பகிரலாமே?

“எங்களது புதிய தொழில்நுட்பம் வழியே குழந்தையின் அழுகையை, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் மொழியாக மாற்றியுள்ளோம். குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்பதை ஓரளவுக்குக் கண்டறிய முடியும்.

அந்த தொழில்நுட்பத்தை Google நிறுவனம் ரொம்பப் பாராட்டினார்கள். அவர்கள் எங்களை அமெரிக்காவின் மவுண்டன் வியூவில் உள்ள வளாகத்திற்கு அழைத்திருந்தார்கள். அங்கு Google-இன் ஆராய்ச்சி அணி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அணி அவர்களுடன் உரையாடினோம்.

அவர்கள் எங்களை ஊடகங்களுடன் இணைத்து YouTube-ல், அவர்களது அதிகாரப்பூர்வ YouTube அலைவரிசையில் எங்களைப் பற்றி ஒரு காணொளிகள் எல்லாம் பதிவு செய்திருந்தார்கள்.

அது இல்லாமல் Google-இன் புத்தாக்க அணியும் நிறைய ஆதரவு அளித்தது. நாங்கள் இப்போது என்ன யோசிக்கிறோம் என்றால், அழுகையைக் கண்டுபிடித்து அதை கண்டறிந்துவிட்டோம்.

ஆனால் இதனால் குழந்தைக்கு நுரையீரலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? இதயத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? குழந்தைக்கு வந்து ஏதாவது அசாதாரண நிலை இருக்கிறதா? என்பதை இந்த அழுகையை வைத்து கண்டுபிடிக்க முடியுமா என்பதுக்கும் நாங்கள் நிறைய இப்போது ஆராய்ச்சிப் பணிகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம். கூகுள் நிறுவனமும் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்குகின்றன.”

“உலகளாவிய அளவில் சேவ் மாம் சேவையை விரிவாக்கத் திட்டம் உள்ளதா?”

“Google எங்களுக்கு அவர்களது ஆரம்பகால தொழில்நுட்ப அணுகல் எல்லாம் வழங்குகிறார்கள். முன்னதாக அதை அணுகுவதற்கு எங்களுக்கு ரொம்ப உதவுகிறார்கள். Google போன்ற ஒரு நிறுவனம் ஆதரவு அளிக்கும் போது இதை வந்து எங்களால் பெரிய அளவில் எடுத்துட்டு போக முடியும்.

ஏனென்றால் Google பில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தயாரிப்புகளை உருவாக்குவார்கள். ஆகவே, அவர்கள் கூட உரையாடியது எங்களுக்கு அது உதவியது.

நாங்கள் உலகம் முழுவதும் 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன.இந்த 140 மில்லியன் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பராமரிப்பை எப்படி கொண்டு போவது என்பது எங்கள் இலக்காக இருக்கிறது.”

(சாகசம் தொடரும்..!)

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *