• July 11, 2025
  • NewsEditor
  • 0

ஒடிசா மாநிலம் முழுவதும், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, காவல்துறையால் ஓட்டுநர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஓட்டுநர்கள் கடந்த 8-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அதனால், ஒடிசா மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பு கடுமையாக ஸ்தம்பித்தது. ஆம்புலன்ஸ்கள், பள்ளி பேருந்துகளுக்கு மட்டும் வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டன.

ஒடிசா

இந்த நிலையில், ஒடிசாவின் நுபாடா மாவட்டத்தில் இருக்கும் சிகாபஹால் கிராமத்தைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி மங்கள்பரி, நாய்கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டுவருகிறார். கடந்த புதன்கிழமை அவருக்கு இறுதி ரேபிஸ் தடுப்பூசி போடப்பட இருந்தது. ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்தால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், மங்கள்பரி மூதாட்டி சுமார் 10 கிமீ நடந்து சென்று சுகாதார மையத்தில் ரேபிஸ் தடுப்பூசி போட்டுவிட்டு, மீண்டும் 10 கிமீ நடந்து வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இவர் நடந்துச் சென்ற வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து பேசிய சினாபாலி வட்டார வளர்ச்சி அலுவலர் கர்மி ஓரம், “இன்றைய செய்தியின் மூலம் மூதாட்டி நடந்துச் சென்ற சம்பவம் குறித்து அறிந்தேன். வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த சங்கமே இதுபோன்ற சூழ்நிலைக்கு பொறுப்பாகும். மேலும், குடும்பத்தினர் யாரிடமாவது ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து பாட்டியை தடுப்பூசி போட அழைத்துச் சென்றிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் துர்கா சரண் பிஷி, “நாங்கள் போராட்டத்தைக் கவனித்து வந்தாலும், அத்தியாவசிய சேவைகள் நடப்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோ அல்லது அரசு நிர்வாகமோ இந்த குறிப்பிட்ட சூழ்நிலை குறித்து எங்களுக்குத் தெரிவித்திருந்தால் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் நிச்சயமாக வழங்கியிருப்போம். இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு. இதற்கு சங்கத்தைக் குறை கூறுவது நியாயமற்றது” என்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதும் பலரும் மூதாட்டியின் குடும்பத்தினர் உதவிக்காக ஆம்புலன்ஸை அழைத்திருக்கலாம் எனச் சுட்டிக்காட்டினர். அதற்கு அந்தக் குடும்பத்தினர், “தடுப்பூசி போடக் கூட ஆம்புலன்ஸை அழைக்க முடியுமா? இதுபற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒரு இரு சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால், அவரால் அதில் உட்கார முடியாது” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *