
கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் மதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் நேற்று ( ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் மல்லை சத்யாவின் புகைப்படம் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் மல்லை சத்யா கட்சியில் இருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் மல்லை சத்யா குறித்து பேசியிருந்த வைகோ, “பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்” என்று கூறியிருந்தார். வைகோ குறிப்பிட்ட அந்த மாத்தையா யார்?
* கோபாலசாமி மகேந்திர ராஜா எனும் இயற்பெயர்கொண்ட மாத்தையா விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.
* விடுதலைப் புலிகளால் 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘மக்கள் முன்னணி’ என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டார்.

*இந்திய உளவு அமைப்பான ‘ரா’வுக்கு அமைப்பின் ரகசியங்களை வெளியிட்டார் என்றும், அமைப்பின் தலைவர் பிரபாகரனைக் கொன்றுவிட்டு தலைமைப் பதவிக்கு வரத் திட்டமிட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்.
* பின்னாட்களில் அந்த அமைப்பால் மரண தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.
*அமைப்பின் தலைவரை கொன்றுவிட்டு அந்த இடத்துக்கு வரத் துடித்த மாத்தையா துரோகி என்று வர்ணிக்கப்படுகிறார்.
*இந்நிலையில்தான் தற்போது வைகோ மல்லை சத்யாவை மாத்தையாவுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.