
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அது ஒரு பிப்ரவரிமாதம் இருபதாம் தேதி. என் பெரியப்பா மகனின் திருமணம். எனக்கு அண்ணியாக வரப்போகிறவர் தன் தம்பியை நான் திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் கேட்டார்.
நானோ சாதி மறுப்பு திருமணந்தான் என்விருப்பமெனக் கூறினேன். ‘அப்படீன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா’ பின்னாலிருந்து ஒரு குரல்.
திடுக்கிட்டுத் திரும்பினேன். திருமணப் பேருந்தில் எங்களுடன் வந்த ஒருவர்தான் இதைக்கேட்டது. திகைத்த நான் ஒன்றும் பேசாமல் அகன்று விட்டேன். ஊர்வலத்தில் தொடர்ந்து வந்த அவர் ஸே எஸ் ஆர் நோ என்றார். என்ன சொல்வதென்று தெரியாமல்’ என் அண்ணன்கள் விருப்பப்படி தான் என் திருமணம்’என்று கூறிவிட்டேன்.(தோழியின் காதலுக்கு உதவப்போய் ஏகப்பட்ட சிரமங்களிலிருந்து மீண்ட நேரமது)..
பிறகு ஏப்ரல் முதல் வாரத்தில் அரசுப்பணி கிடைத்து வெளியூர் சென்றுவிட்டேன். ஏப்ரல்23ஆம் தேதி என்னைப் பார்க்க வந்த புதிதாகத் திருமணமான அண்ணன் எனக்கு அந்தக்குறிப்பிட்ட நபருடன் திருமணம் எனக் கூறினார். பெங்களூரிலிருக்கும் என் புது அண்ணியை மறுநாள் பார்க்கச் செல்வதாக உத்தேசம். இத்திருமணத்தில் என்னைவிட என்னுடனிருந்த என் சின்னம்மாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஆனால் அதிகாலை நாங்கள் கிளம்பும் முன் வீட்டுவாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து என் பெரியக்கா, மாமா,அண்ணன், மாப்பிள்ளை என அவரது உறவினர் இருவர் மற்றும் நண்பரென அனைவரும் இறங்கினர். உடனே ஊருக்குக் கிளம்பும்படி கூறினர். அண்ணன் மட்டும் தனியாக பெங்களூரு சென்றார். அன்று மகாவீர் ஜெயந்தி விடுப்பென்பதால் நான் வந்தவர்களுடன் கிளம்பிச் சென்றேன்.
ஊருக்கு வந்தவுடன் தபால் நிலையத்திலிருந்து அலுவலகத்திற்கு தந்தி கொடுக்கச் சொன்னார்கள். டூ அட்டெண்ட் மை மேரேஜ் கிராண்ட் மீ டூ டேஸ் லீவ் என்று அனுப்பி விட்டு அவர்களுடன் வீட்டிற்குப் போனேன். அன்று சார்பதிவாளர் அலுவலகம் விடுப்பென்பதால் அடுத்தநாள் அங்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரது அப்பா அண்ணா உறவினர்கள் எனது உறவினர் சிலர் ,விஷயம் கேள்விப்பட்டு அழைக்காமல் வந்த நண்பர்களென ஏராளமானோர் இருந்தனர்.
ஒருவருக்கொருவர்அறிமுகப்படலம் நடந்தது இவ்வளவு பேருடன் வருவதற்கு மண்டபத்திலேயே நடத்த வேண்டியது தானேஎன்று அங்குள்ளோர் கூறியது காதில் பட்டது. ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள். மாலையில்லை தாலியில்லை கூடியிருந்தோர் கரவொலியுடன் திருமணம் முடிந்தது. வெளியில் ஒருவர் எல்லோருக்கும் இனிப்பு(வேறென்ன ஆரஞ்சு மிட்டாய் தான்) வழங்கிக் கொண்டிருந்தார். எல்லோரையும் வேனிலும் காரிலும் ஏறச் சொன்னார்கள்.
ஒரு நண்பர் மிகவும் வற்புறுத்தி அனைவரையும் அவரது மாமனார் வீட்டிற்கு அழைத்துச்சென்று சர்பத் வழங்கினார்(பின்னாளில் எங்களின் சம்பந்தியுமானார்). பிறகு அனைவர்க்கும் மதிய உணவுஅவர்களின் வீட்டில். இரவு உணவு எங்கள் வீட்டில். திருமணமான சுவடே இல்லை.
மறுநாள் நான் அலுவலகம் செல்லக் கிளம்பினேன். இவரும் என்னுடனே வந்தார். எவ்வித மாற்றமும் இன்றி வந்த என்னை தன்னுடைய கல்யாணத்திற்கு கேஷுவல் லீவ் கேட்டதாக கிண்டலடித்தவர்கள் பார்ட்டி வைத்து கட்டாய மருத்துவ விடுப்பு எடுக்க வைத்து அனுப்பினர்.
ஆனால் எனக்கு திருமணமான உணர்வே இல்லை. கூட்டுக் குடும்பம் தான். இன்னும் இவர் எனக்கு ஒரு நண்பராகவும் நலம் விரும்பியாகவும்தான் தெரிகிறாரே ஒழிய கணவராகத் தெரிவதில்லை. நல்ல நிலையிலுள்ள இருமக்கள். உடல்நலக்குறைவுகளும் பொருளாதாரச் சிக்கல்களும் வந்த போதும் நல்ல புரிந்துணர்வு இருப்பதனால் எல்லாவற்றையும் சமாளிக்க முடிந்தது. இதோ அதோவென்று நாங்கள் கரங்கோர்த்து 43 வருடங்கள் கடந்துவிட்டன.எங்கள் வாழ்க்கைப் பேருந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.பேரக் குழந்தைகளின் பின்னால் நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம்.