
நடிகர் ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி அவரைச் சந்தித்துப் பேசினோம்.
நம்மிடையே பேசிய அவர், “ஆரம்பத்திலிருந்தே நடிப்பின் மேல் எனக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம்தான். நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்த நேரத்தில், வெண்ணிலா கபடி குழு படம் வெளியானது.
ஆனால், அதற்கு முன்பிருந்தே சினிமாத் துறைக்கு வரவேண்டும் என்று மனதில் ரொம்ப ஆசை இருந்தது. நான் ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அண்ணன் கிரிக்கெட்டராக இருந்தார். அப்போதிலிருந்தே எனக்கு சினிமாத் துறைக்குள் வரவேண்டும் என்று ஆசை இருந்தது.
ஆனால், அந்த சமயத்தில் சினிமா என்றால் ரொம்ப பிரம்மாண்டமான, எட்டாத கனவு போல இருந்தது. எத்தனையோ பேர் இருக்கிறார்கள், நமக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காது என்றுதான் என் எண்ணம் இருந்தது,” என்றவர், “நான் ரொம்ப சின்னப் பையனாக இருந்தபோது, கிரிக்கெட்டராக இருந்த அண்ணனுக்கு விளையாடும்போது அடிபட்டு காயம் ஏற்பட்டது.
பிறகு அண்ணன் விளையாடுவதை நிறுத்திவிட்டு கொஞ்சம் ஓய்வில் இருந்தார். பின்னர் அண்ணன் சுமார் ஐந்து ஆறு வருடங்களுக்கு சினிமாவில் முயற்சி செய்து பார்த்தார்.

அப்போது வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும் அண்ணனிடம், ‘நீங்கள் இன்று என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டால், ‘ஆபீஸில் சும்மாதான் உட்கார்ந்திருந்தேன்’ என்று சொல்வார்.
அப்போது என்னுடைய கனவான நடிப்புத் துறை ரொம்ப கஷ்டமானது என்று தோன்றும். என் ஹீரோவான அண்ணன் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது, நான் எப்படி இந்தத் துறையில் நல்லா செய்ய முடியும் என்று மனதில் தயக்கம் இருந்தது.
அண்ணனுக்கு முதல் படம் கிடைத்தபோது, யுனிவர்ஸ் எனக்கு ஏதோ ஒரு வகையில் சின்னச் சின்ன கதவுகளைத் திறப்பது மாதிரி தோன்றியது. பிறகு அண்ணன் ஓரளவு சினிமாத் துறையில் பிரபலமானார்.
எனக்கு நடிக்க ஆசையும் ஆர்வமும் இருப்பது அண்ணனுக்கு முன்பே நன்றாகத் தெரியும். அண்ணன் எப்போதும் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்வார்.
‘உனக்கு ஆசை இருந்தால் செய்யலாம்’ என்று சொல்வார். இப்படி அற்புதமான வாய்ப்பு கிடைப்பது ரொம்ப அரிதானது. கோடியில் ஒருவருக்கு மட்டுமே இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போது அதற்கு மதிப்பு கொடுக்கணும் என்று நினைத்தேன்.

பள்ளி, கல்லூரி என்று படித்து முடித்தவுடன் நேராக நடிப்புத் துறைக்கு வராமல், சினிமாத் துறையைக் கற்றுக்கொண்டு வரலாம் என்று முடிவு செய்தேன்.
நான் உதவி இயக்குநராகவும், தயாரிப்புத் துறையிலும் இருந்தபோது கிடைத்த அனுபவங்கள் இன்று நடிப்புத் துறையில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது,” என்றார் உற்சாகத்துடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…