
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல போக்குவரத்து அதிகாரி ஹேமங்கி பாட்டீல் பேசியதாவது: பள்ளிகளில் மாணவர்களுக்கு தினசரி கல்வியின் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பிக்கப்பட வேண்டும். இது விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும். மேலும் சாலையை பொறுப்புடன் பயன்படுத்தும் கலாச்சாரத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தும்.
பெற்றோர்களை விட ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் கேட்கின்றனர். குழந்தைகள் இளம் வயதிலேயே சாலை விதிகளை பின்பற்றத் தொடங்கினால் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும். தானே நகரில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வரும் காலத்தில் சாலை விபத்தில்லா நகரமாக இது மாறவேண்டும் என்பதே எனது இலக்காகும். இவ்வாறு அவர் கூறினார்.