
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை மீதான விமர்சனங்கள் எப்போதும் ஓய்வதேயில்லை. கோயில்களைக் கட்டுப்படுத்தும் உரிமை அரசுக்கு இருக்கக் கூடாது என்பது இந்துத்துவ அமைப்புகள் நீண்டகாலமாக கூறிவரும் ஒன்று. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையைக் கலைத்துவிடுவோம் எனக் கூறினார் அண்ணாமலை.
இப்போது அறநிலையத்துறை கோவில் வருமானத்தில் கல்லூரிகள் கட்டுவது சதி வேலை எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. காமராஜர் காலம் முதலே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. 1981-ம் ஆண்டு திண்டுக்கலில் எம்.ஜி.ஆர் தொடங்கிய அருள்மிகு பழனியாண்டவர் பல்தொழில்நுட்ப கல்லூரியில் அறநிலைய துறை சார்பாக கட்டப்பட்ட ஒரு நிர்வாகக் கட்டடத்தை 2017-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே திறந்துவைத்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய பேச்சுகள் திடீரென வெளிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் 2021-ம் ஆண்டு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மேலும் கல்லூரிகள் கட்ட தடை விதித்திருக்கிறது நீதிமன்றம். அதற்கு காரணம் என்ன? கல்லூரிகள் மட்டுமல்லாமல் வேறெந்த பணிகளுக்கு இந்துசமய அறநிலையத்துறையின் வருமானம் செலவழிக்கப்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அதற்கு முன்னர் இந்து சமய அறநிலையத்துறை ஏன் உருவானது என்ற வரலாற்றைக் காணலாம்.
கிழக்கிந்திய கம்பெனி
கிழக்கிந்திய கம்பெனி இந்திய பிராந்தியங்களைக் கைப்பற்றி வந்தபோது வியாபாரத்திற்காகவே ஆட்சியைப் பயன்படுத்தியது. மதராஸ், பம்பாய், கல்கத்தா மாகாணங்களில் அதிகாரம் செலுத்த மக்களின் ஆதரவையும் பெற வேண்டிய நிர்பந்தம் உருவானபோது ஆன்மிக காரியங்களில் கண்வைத்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது இந்திய கோவில்களுக்கு அரசர்கள் தானமாக வழங்கியதும், கோவில் சொத்துக்களுமாக இருந்த செல்வங்களில் இருந்து வரி ஈட்டும் எண்ணம் ஆங்கிலேயர்களுக்கு இருந்துள்ளது.
தென்னிந்திய கோவில்கள், அரசர்கள், ஜமீன்களையும் நிர்வாகத்தின் அங்கமாகக் கொண்டிருந்தன. சோழர் காலத்தில் ‘கோவில் கணக்கு’ என்ற பெயரில் கோவில்களின் வரவு செலவுகள் கண்காணிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஊர் பெரியவர்கள் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மன்னாராட்சி அமைப்புகள் சிதைவால் கோவில் சொத்துக்களை அணுகும் இடத்தில் இருந்தவர்கள் அபகரிப்பதும் தனியார்மயப்படுத்துவது அதிகரித்தது, இதனால் மக்கள் கம்பனி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
மன்னர் கால மரபைத் தொடரும்விதமாக ஆங்கிலேய அரசு கோவில் நிர்வாகத்தில் தலையிட விரும்பியது இரண்டாவது காரணம். அப்போதைய மதராஸ் மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பதி தேவஸ்தலம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்களில் நிர்வாக குழுக்களில் கம்பெனி அதிகாரிகளை நியமித்தது.
காலம் செல்லச் செல்ல முழுமையான அரசாக கிழக்கிந்திய கம்பெனி உருவானது. பல கோவில்களில் கோவில் சொத்துகள் தனிநபர்களால் சூரையாடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த சூழலில், கோவில் வருமானம் மற்றும் சொத்துகளை நிர்வகிக்க மதராஸ் நன்கொடைகள் மற்றும் வாரிசு இல்லா சொத்துகள் ஒழுங்கமைவு சட்டம் 1817ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதன் முக்கிய நோக்கம் கோவில்கள், மசூதிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு பொது நல நோக்கத்துடன் வழங்கப்பட்ட நிலங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்வதேயாகும்.
இந்த சொத்துக்களை கையாள்வதில் வருவாய் வாரியமே அதிகாரம் படைத்த அமைப்பாக மாற்றப்பட்டது. இந்த வாரியம் அறங்காவலர் நியமனத்திலும் தலையிட்டது. இப்படியாக முறையான அமைப்பாக உருவான இந்த சட்டம் 1926ல் மெட்ராஸ் இந்து மத அறக்கட்டளை சட்டம், மற்றும் 1959-ஆம் ஆண்டில் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் உருவாக அடித்தளமாக அமைந்தது.
மகாராணி ஆட்சி
1857ம் ஆண்டு நடந்த இந்திய புரட்சியின் விளைவாக, 1858ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பனிக்கு பதிலாக பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்தியா கொண்டுவரப்பட்டது.
பிரிட்டிஷ் மகாராணி இந்தியாவில் ஆட்சி செய்வது குறித்து வெளியிட்ட பேரறிக்கையில் மக்களின் மத விவகாரங்களில் ஆங்கிலேய அரசு தலையிடாது எனக் கூறியிருந்தார்.
இதனால் கோவில் நிர்வாகம் மீதிருந்த அதிகாரம் வருவாய் வாரியத்திடம் இருந்து மீண்டும் முந்தைய அறங்காவலர் மற்றும் முக்கிய நபர்களிடத்திலேயே கொடுக்கப்பட்டது. இந்திய கோவில்களை பராமரிப்பது மிகவும் சிக்கலான பணி. பல்வேறு பிணைப்புகள் மற்றும் விலகல்களுடன் இருந்த இந்திய சமூகம் மற்றும் கோவில்களுக்கு இடையிலான உறவில் முடிவுகளை எடுப்பதில் இருந்து விடுவிக்கப்பட்டது ஆங்கிலேய அரசு.
ஆனால் தொடர்ந்து கோவிலில் உள்ள விலை உயர்ந்த சிற்பங்கள் உருக்கப்படுவதும், நிலங்கள் அபகரிக்கப்படுவதும், சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமாக மக்களிடம் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டிருந்தன.
இதற்காக ஆங்கிலேய அரசு இயற்றிய சமய கட்டளைகள் சட்டம 1863 முதலான பல சட்டங்கள் திறனற்றதாகவே இருந்தன.
அப்போது இந்திய மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறை இருந்தது. ஆங்கிலேய அரசு மத்திய விவகராங்களில் முடிவெடுத்தாலும், சில குறிப்பிட்ட துறைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாகாண அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
பனகல் அரசர் கொண்டுவந்த சட்டம்
1920களில் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் காங்கிரஸ் மாகாண தேர்தலில் போட்டியிடவில்லை. அப்போது பிராமணர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளைப் பேசிய நீதிக்கட்சி தேர்தலில் வென்று 1920ம் ஆண்டு மாகாணத்தில் ஆட்சிமைத்தது.

நீதிக்கட்சியில் இருந்த உட்கட்சி பிரச்னைகளால் ஏ.சுப்பராயலு ரெட்டியார், பி.டி.தியாகராயர் ஆகியோரைத் தொடர்ந்து 1921ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார் பனகல் அரசர். ராமராயனிங்கர் என்பது இவரது இயற்பெயர்.
இப்போதைய ஆந்திராவில் செல்வந்த பனகல் ஜமீன் குடும்பத்தில் பிறந்த இவர், மதராஸில் மருத்துவம் படித்தவர். ஆட்சியில் இருந்தபோது மருத்துவம் கற்க சமஸ்கிருதம் அவசியம் என்ற விதியை நீக்கியது, அரசு வேலைகளில் பிராமணர் அல்லாதோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற சமூக நீதிக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.
அதேப்போல, அனைத்து இந்து கோவில்களின் நிர்வாகத்தையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்து பரிபாலன சட்டத்தை இயற்றினார். 1922ம் ஆண்டு இந்த சட்டம் முன்மொழியப்பட்டது.
இதன்படி இந்து கோயில்கள், மடங்கள், மத நிறுவனங்களின் சொத்துக்கள், வருவாய், மற்றும் நிர்வாகத்தை அரசு மேற்பார்வையிடுவதுடன், தனிநபர்களால் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்து தக்க அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிக்கும்.
பெரிய கோவில்களிலிருந்து வரும் வருவாய் மூலம், நலிவுற்ற கோவில்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
1925ம் ஆண்டில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் முறையிட்டு 1927-ல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.
சீர்திருத்தங்கள்
இந்த வாரியத்தின் மீது அன்றைய வலதுசாரி இயக்கங்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. குறிப்பாக தன்னாட்சி அமைப்பான இந்து சமய அறநிலைய வாரியம், கோவில்களில் வசூலிக்கும் தொகை ஒரு வரியாக கருதப்பட்டதால் அந்த பணத்தில் மாகாண அரசுக்கு உள்ள உரிமை குறித்த கேள்விகள் எழுந்தன.
நிர்வாக பிரச்னைகள் மற்றும் மத சுதந்திரத்தில் தலையிடுதல் போன்ற விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அப்படி போடப்பட்ட வழக்குகள் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்தன.
முக்கியமாக இந்து சமய அறநிலைய வாரியம் தன்னாட்சி அமைப்பாக இருந்து இந்து சமய அறநிலையத்துறையாக (Hindu Religious and Charitable Endowments Department – HR&CE) உருவாக இந்த சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன.
சுதந்திரத்துக்குப் பிறகு…
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசியலமைப்பு (1950) மத சுதந்திரத்தை (பிரிவு 25 மற்றும் 26) வலியுறுத்தியதால், இந்து சமய அறநிலைய வாரியத்தின் அதிகாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன, அதன் செயல்பாடுகளை மேலும் முறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதனால் மதராஸ் இந்து மத மற்றும் தொண்டு அறக்கட்டளை சட்டம், 1951 இயற்றப்பட்டது.
1954ம் ஆண்டு மதராஸ் அரசுக்கு எதிராக போடப்பட்ட ஸ்ரீ ஷிரூர் மடம் வழக்கு, மதராஸ் இந்து மத மற்றும் தொண்டு அறக்கட்டளை சட்டத்தில் பல்வேறு பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி பல மாற்றங்களைக் கோரியது.
இறுதியாக 1959ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்பது முழுமையாக நீக்கப்பட்டு, அரசின் ஒரு துறையாக மாற்றப்பட்டது. அப்படியாக இந்து சமய அறநிலையத்துறை உருவானது.
இப்படி தொடங்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை காலந்தோறும் பல்வேறு வழக்குகளில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை அல்லது ஏதேனும் ஒரு ஒன்றுபட்ட நிர்வாக அமைப்பு இல்லாவிட்டால் ஒவ்வொரு கோவில்களிலும் ஆதிக்கம் செலுத்தும் நபர்களால் எப்படி முடிவில்லா சிக்கல்கள் எழுந்துகொண்டே இருக்குமோ, அதேபோல இந்து சமய அறநிலையத்துறையில் முடிவில்லாமல் மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும்.
சமூக நீதி எனும் இலக்கை நோக்கி சமூகம் நகரும்போது, சமய நிறுவனங்களும் பிற நிர்வாக அமைப்புகளும் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை மேற்கொண்டு நகரும்.
இந்துசமய அறநிலையத்துறை சொத்துகள்
இன்றைய இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 43,766 கோவில்கள், 22 சமண கோவில்கள், 45 மடங்கள், 69 மடத்துடன் இணைந்த கோவில்கள், 1263 அறக்கட்டைகள் கூடுதலாக 1130 குறிப்பிட்ட அறக்கட்டளைகள் உள்ளன.
மொத்தமுள்ள 46,295 அமைப்புகளில் 34,744 கோவில்கள் வருடாந்திர வருமானம் 10,000க்கும் கீழ் மற்றும் 586 கோவில்களின் வருமானம் 10 லட்சத்துக்கும் அதிகம்.
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிகளுக்குச் சொந்தமாக 1.83 லட்சம் ஏக்கர் நன்செய் நிலங்கள், 2.18 லட்சம் ஏக்கர் புன்செய் நிலங்கள், 0.21 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இவற்றில் இருந்து வாடகை, மற்றும் கட்டங்களிலிருந்து வாடகை மூலம் வருமானம் ஈட்டப்படுகிறது.
இந்த நிலங்கள் பெரும்பாலும் அரசின் முயற்சியால் மீட்கப்பட்டவை. “07.05.2021 முதல் 31.03.2025 காலத்தில் 951 திருக்கோயில்களின் அசையாச் சொத்துகளில் ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்பில் இருந்து 7,388 ஏக்கர் வேளாண் நிலங்களும், 1,530 கிரவுண்டு காலிமனைகளும், 251 கிரவுண்டு பரப்பிலான கட்டடங்களும் மற்றும் 140 கிரவுண்டு அளவிலான திருக்கோயில் குளக்கரைப் பகுதிகளும் மீட்டு எடுக்கப்பட்டு அந்தந்த திருக்கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட சொத்துகளின் மதிப்பு ரூபாய் 7636.94 கோடி” என அரசு தெரிவிக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அன்னதானம், கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம், கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம், அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம், பெண் அர்ச்சகர்கள் நியமனம், ஒருகால பூஜைத் திட்டம், இசைவாணர்கள் நியமனம், புத்துணர்ச்சி பயிற்சி படிப்புகள், நாதஸ்வர கலைஞர்கள் நியமனம், திருக்கோயில் பணியாளர்களுக்கான நலத் திட்டங்கள், திருக்கோயில் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு படிப்புதவித் திட்டம், துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டம், ஆன்மிக மற்றும் நீதிநெறி வகுப்புகள், யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம்கள் போன்ற திட்டங்கள் செயல்படுகின்றன.
இது தவிர முருகன் மாநாடு, கும்பாபிஷேகங்கள், புனரமைப்புகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சமயக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கல்லூரிகள் கட்டலாமா…
கடந்த 2021ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஏழை மாணவர்கள் பயன்ப்பெறும் வகையில் 10 புதிய கல்லூரிகள் கட்டப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
ஆனால் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படுவதை எதிர்த்து ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் தொடர்ந்த வழக்கில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியை கொளத்தூரில் கல்லூரி கட்டுவதற்கு பயன்படுத்துவது தவறு என்றும் கல்லூரிகள் மத நோக்கத்துக்கானது அல்ல என்றும் குறிப்பிடப்பட்டது.
மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் இந்து சமயக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கில், கோயில் நிலத்தில் கல்லூரி கட்டுவதற்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம். கோவில் நிலத்தில் கல்லூரி கட்டப்படும்போது சமய கல்வி கற்பிப்பது உள்ளிட்ட தெளிவான மத நோக்கம் இருக்க வேண்டுமென்றது.
அறிவிக்கப்பட்ட 10 கல்லூரிகளில் கபாலீஸ்வரர் கல்லூரியுடன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்ச்சத்திரம் – அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு – அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த கல்லூரிகளில் சமய கல்வியை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.