
மகாராஷ்டிராவில் உள்ள கிராமங்களில் சரியான போக்குவரத்து வசதியோ அல்லது சாலை வசதியோ கிராங்களில் இல்லை. இதனால், கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
மலைப்பகுதியில் மழை காலத்தில் சிறிய ஆறுகள், ஓடைகளில் மழை நீர் சென்று கொண்டிருக்கும். அதனை கடந்துதான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவேண்டும்.
நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள மலையடி வாரத்தில் இருக்கும் கிராமத்து மாணவர்கள் பள்ளிக்கு தினமும் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர்.
அவர்கள் செல்லும் வழியில் இரண்டு ஆறுகள் ஓடுகிறது. அதில் வர்காதி ஆற்றில் உள்ளூர் மக்களே சேர்ந்து கம்புகள் மற்றும் கயிற்றை கொண்டு தற்காலிக பாலம் கட்டி இருக்கின்றனர். அந்த பாலத்தை கடந்து மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். அந்த ஆற்றை கடந்த அடுத்த சில கிலோமீட்டர் தூரத்தில் ஓடும் ஆற்றில், பாலம் கிடையாது.
மாணவர்கள் கால்நடையாக நடந்து தண்ணீரை கடந்து செல்கின்றனர். மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் ஒருவரை ஒருவர் கையை பிடித்துக்கொண்டு எறும்புகள் போன்று வரிசையாக தண்ணீரை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.
சில மாணவர்கள் தண்ணீரில் சறுக்கி விழவும் செய்தனர். ஆனாலும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்கள் இரண்டு ஆறுகளை கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.
சாலை வசதியை ஏற்படுத்திக்கொடுத்தால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வசதியாக இருக்கும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மாநில அரசு அதனை கண்டுகொள்ளமல் இருக்கிறது. நந்துர்பர் பகுதியில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
மும்பை அருகில் உள்ள பால்கர் மாவட்டத்திலும் நகட்பாடா என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து தினமும் ஆற்றை கடந்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.