
புதுடெல்லி: ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டம் சூரத்கர் நகரில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. இங்கிருந்து ஜாகுவார் போர் விமானம் நேற்று முன்தினம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. இந்த விமானம் சுருமாவட்டம், பனோடா கிராமத்துக்கு அருகில் திடீரென வயலில் விழுந்து நொறுங்கியது. இதில் விமான பாகங்கள் தீப்பற்றி எரிந்ததில் லோகேந்திர சிங் சிந்து (31), ரிஷி ராஜ் சிங் (23) ஆகிய இரு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களில் லோகேந்திர சிங், ஹரியானாவின் ரோத்தக் நகரையும் ரிஷி ராஜ் சிங், ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்தில் இறந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு இந்திய விமானப் படை (ஐஏஎப்) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.