
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்பில் முஸ்லிமாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, பல்ராம்பூரை சேர்ந்த ஜுங்கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நெருங்கிய நண்பர் நீத்து நவீன் ரொஹரா(எ) நஸ்ரின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏடிஎஸ் படையினர் 14 பேரை தேடி வருகின்றனர். ஜுங்கூர் பாபாவால் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களிடம் ஏடிஎஸ் படையினர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் ஒரு பிரபல தர்காவுக்கு வெளியே ஜுங்கூர் பாபா, மோதிரங்களை விற்று வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மதம் மாற்றத்துக்கு நிதி அளிக்கும் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் உதவியால் ஜுங்கூர் பாபா, மகாராஷ்டிராவில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.