Doctor Vikatan: என் வயது 49. மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. கை, கால்களில் வலியையும், பலவீனத்தையும் உணர்கிறேன். மருத்துவர் கால்சியம் மாத்திரை எழுதிக்கொடுத்தார். ஆனால், கால்சியம் மாத்திரை சாப்பிட்டால், கிட்னியில் கல் வரும் என்கிறாள் என் தோழி. அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
மெனோபாஸ் காலத்தில் பெண் உடலின் மிக முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் 50 ப்ளஸ் வயதில் எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். ஒருநாளைக்கு ஒரு பெண்ணுக்கு 500 முதல் 1000 மில்லிகிராம் கால்சியம் தேவை. சிலருக்கு அவர்களது உடல்நிலையைப் பொறுத்து இது 2,000 மில்லிகிராம்கூட தேவைப்படலாம். உணவின் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது என்பதால் சப்ளிமென்ட் எடுக்க வேண்டும்.
மெனோபாஸில் கால்சியம் குறைபாடு காரணமாக, எலும்புகள் மென்மையாகும் ஆஸ்டியோபொரோசிஸ் என்கிற பிரச்னை, லேசாக இடறினாலோ, தடுக்கினாலோகூட எலும்பு முறிவது, கை, கால்களில் வலி, பலவீனம் போன்றவற்றை உணர்வார்கள். அதற்கு சப்ளிமென்ட் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்போம். கால்சியம் சப்ளிமென்ட்ஸ் எல்லாமே கிட்னி ஸ்டோன்ஸை ஏற்படுத்தாது. அதில் பல வகைகள் உள்ளன. யார், எந்த டோஸ், எத்தனை நாள்களுக்கு எடுத்துக்கொள்கிறார் என்பதும் இதில் முக்கியம். மருத்துவர் பரிந்துரைக்கும்போது பக்க விளைவுகளற்றதாகவே தருவார். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத்தான் கிட்னி ஸ்டோன்ஸ் வரும். ஏற்கெனவே கிட்னி ஸ்டோன்ஸ் இருந்தால், கால்சியம் சப்ளிமென்ட் எடுப்பதில் கவனம் தேவை.
கால்சியம் சப்ளிமென்ட்டை உணவுடன் சேர்த்து எடுக்கும்போது அது உட்கிரகிக்கப்படுவது சிறப்பாக இருக்கும். இத்தனை நாள்களுக்குத்தான் கால்சியம் எடுக்க வேண்டும் என கணக்கு இல்லை. பல வருடங்கள் தொடர்ந்து எடுத்தாலும் பிரச்னை வர வாய்ப்பில்லை. அதுவே, இரண்டு, மூன்று கால்சியம் மாத்திரைகள் எடுக்கும்போது அது பிரச்னையை ஏற்படுத்தலாம். பால், தயிர், மோர், பனீர், கீரை வகைகள் மூலம் இயற்கையாகவே கால்சியம் உடலில் சேரும். எல்லோருக்கும் சப்ளிமென்ட்ஸ் தேவையும் இல்லை. 50 ப்ளஸ் வயதில, எலும்புகள் வலிமையிழக்கும் நிலையில் தான் அது தேவை. கால்சியம் குறைபாட்டுடன், வைட்டமின் டி பற்றாக்குறையும் இருப்பது தெரிந்தால், குறிப்பிட்ட நாள்களுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸையும் சேர்த்தே மருத்துவர் பரிந்துரைப்பார். எனவே, மருத்துவர் பரிந்துரைக்கும்போது பயமின்றி எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.