
கோவை காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 23). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். வீடு சிறியதாக இருப்பதால் சஞ்சய் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். தினசரி அங்கு தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் தூங்க சென்றவர் எழுந்திரிக்கவில்லை. அவரின் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அங்கு அவர் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சஞ்சயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதே ஊரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கீர்த்தனா என்பவருக்கும், சஞ்சய்க்கும் பகை இருந்துள்ளது. இதன் காரணமாக கீர்த்தனா குறித்து, சஞ்சய் ஊர் முழுவதும் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த கீர்த்தனா தன் உறவினர் கமலக்கண்ணன் (வயது 20) என்பவரிடம் கூறியுள்ளார். ஆட்டோ டிரைவரான கமலக்கண்ணன், தன்னுடைய நண்பனும், கூலித் தொழிலாளியுமான நாகராஜ் (வயது 19) என்பவரை அழைத்துக் கொண்டு சஞ்சயை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது இருவரும் சஞ்சயை சரமாரியாக வெட்டியுள்ளனர்.


அங்கு ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கீர்த்தனா கண்காணித்துள்ளார். 12 இடங்களில் காயமடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கமலக்கண்ணன், நாகராஜ், கீர்த்தனா ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.