
சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் டயபடீஸ் பலரையும் பாதித்து வருகிறது. விளைவு, இன்று பலரும் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிய பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.
அந்த வகையில் டயபடீஸ் குறைப்பதற்காக ரத்தத்தில் எளிதில் கலக்காத செயற்கையான சர்க்கரை மாற்றுகளை தேர்ந்தெடுத்து உபயோகிக்கின்றார்கள். இந்த நிலையில், இதய மருத்துவர் ஆலாக் சோப்ரா என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அல்லுலோஸ் (Allulose) என்ற செயற்கையான சர்க்கரை மாற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததுள்ளதாகவும், இது ரத்த சர்க்கரையை உயர்த்தாது மற்றும் உடலில் கொழுப்புகள் சேருவதையும் கட்டுப்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.
அவருடைய இந்தப்பதிவு பரவி வரும் சூழலில், இது எந்த அளவிற்கு உண்மை மற்றும் அதனை பற்றிய தகவல்களை சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் மற்றும் நீரிழிவு ஆராய்ச்சியாளர் டாக்டர் மோகன் அவர்களுடன் கேட்டறிந்தோம்.
‘’சர்க்கரைக்கு இயற்கையான மாற்றுகளாக ஸ்டிவியா, மேப்பிள் சாறு, தேங்காய் சர்க்கரை, பேரீச்சம்பழ சர்க்கரை போன்றவை அறியப்படுகின்றன. தவிர, சார்பிட்டால் (Sorbitol), சைலிட்டால் (Xylitol), லாக்டிடால் (Lactitol), மான்னிடால் (Mannitol), எரித்ரிட்டால் (Erythritol), மால்டிடோல் (Maltitol) போன்ற சர்க்கரை ஆல்கஹால்களும், அஸ்பார்டேம் (Aspartame), சுக்ரலோஸ் (Sucralose), சாக்கரின் (Saccharin), நியோடேம் (Neotame), அசிசல்ஃபம் பொட்டாசியம் (Acesulfame Potassium) போன்ற செயற்கை இனிப்பூட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் சர்க்கரையை விட 100 மடங்கு இனிப்பாக இருக்கும்.
இருப்பினும், இதனை சிறிய அளவில் எடுத்துக்கொண்டால்கூட இரைப்பை அலர்ஜி, கண்ணெரிச்சல், மாரடைப்பு மற்றும் திடீர் மரணம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இயற்கையாகவே, கோதுமை, அத்திப்பழம், திராட்சை, வெல்லப்பாகு, மேப்பிள் சிரப், பலாப்பழம், கிவி, கேரமல், பழச்சாறுகள் மற்றும் காபி ஆகியவற்றில் அல்லுலோஸ் சிறிய அளவில் காணப்படுகிறது. இது சர்க்கரையை விட 70% மட்டுமே கூடுதல் இனிப்பாக இருக்கிறது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அல்லுலோஸ் பற்றி பெரிதாக எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. கனடா மற்றும் ஐரோப்பியாவில் இதற்கு தரச் சான்றிதழ்கள் அளிக்கப்படவில்லை. அமெரிக்காவில் இது GRAS (generally Regarded as safe) என்கிற சான்றிதழை மட்டுமே பெற்றுள்ளது.

புதிதாக மாறுபட்ட ஒன்றை நாம் பயன்படுத்துவதற்கு முன்பு அதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அல்லுலோஸ் என்கிற இந்த மாறுபட்ட சர்க்கரை இன்னும் வணிக அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதற்கான ஆய்வுகளும் முழுமையாக செய்யப்படவில்லை. இதனை பயன்படுத்துவதில் கவனம் தேவை. நீண்டகால பயன்பாடுகளின்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆராய்ச்சிகள் முழுமையாக நிறைவடைந்த பின் இதனை பயன்படுத்துவது சிறந்தது என்கிறார் டாக்டர் மோகன் அவர்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR