
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்வானி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சோனி (22) என்பவரும், நிகிழ் (24) என்பவரும் சந்தித்துக்கொண்டனர். இச்சந்திப்பு அவர்களுக்குள் நாளடைவில் நட்பை ஏற்படுத்தியது.
இந்த நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். இதில் சோனி கர்ப்பமானார். நிதி நிலை மற்றும் திருமணம் செய்து கொள்ளாமை போன்ற காரணங்களால் குழந்தையைக் கலைக்க முடிவு செய்தனர்.
ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. 2024ம் ஆண்டு சோனிக்குக் குழந்தை பிறந்தது. அவர்கள் குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்தனர்.
இதையடுத்து இரண்டு பேரும் டெல்லியில் குடியேறினர். அங்கு சோனலுக்கு அதே பகுதியில் வசிக்கும் ரேஷ்மி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
இந்த அறிமுகம் காரணமாக அடிக்கடி ரேஷ்மி வீட்டிற்கு சோனல் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ரேஷ்மியின் கணவர் துர்கேஷுடன் சோனலுக்குத் தொடர்பு இருப்பதாக நிகில் சந்தேகப்பட்டார்.
இது தொடர்பாக சோனலுக்கும், நிகலுக்கும் இடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சோனலுக்கும், துர்கேஷுக்கும் இடையே நடந்த வாட்ஸ்ஆப் சாட்டிங்கைப் பார்த்து சோனலுடன் நிகில் அடிக்கடி தகராறு செய்தார்.
இந்நிலையில் சோனல் மீண்டும் கர்ப்பமானார். மீண்டும் குழந்தையைக் கலைக்கவேண்டும் என்று சோனல் தெரிவித்தார். ஆனால் நிகில் இக்குழந்தையைக் கலைக்க வேண்டாம் என்றும் இக்குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கையில் ஷெட்டிலாகலாம் என்றும் நிகில் தெரிவித்தார்.
ஆனால் அதனைக் கேட்காத சோனல் நிகிலுக்குத் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று கருவைக் கலைத்தார். இதனால் ரேஷ்மியின் கணவர் சொல்லித்தான் சோனல் கருவைக் கலைத்ததாக நிகில் நம்பினார். எனவே மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இச்சண்டை முற்றிய நிலையில் சோனல், ரேஷ்மியின் வீட்டிற்குச் சென்று அங்கு வசிக்க ஆரம்பித்தார். ஆனாலும் நிகில் தொடர்ந்து சோனலுடன் தொடர்பில் இருந்தார். அடிக்கடி போன் மூலம் சமாதானமாகப் பேசி மீண்டும் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் சோனல் வர மறுத்தார்.
இந்நிலையில் ரேஷ்மி தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகச் சென்றார். ரேஷ்மியின் கணவரும் வெளியில் சென்று இருந்தார். வீட்டில் சோனலும், ரேஷ்மியின் 6 மாத குழந்தையும் தனியாக இருந்தனர்.
அந்நேரம் நிகில் அங்குச் சென்று தன்னுடன் வரும்படி சோனலிடம் கேட்டுக்கொண்டார். நிகில் தன்னுடன் ஆப்ரேசனுக்குப் பயன்படும் பிளேடு ஒன்றையும் எடுத்துச் சென்று இருந்தார். இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறு முற்றிய நிலையில் சோனல் வாயில் நிகில் டேப் ஒட்டிவிட்டு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதே போன்று 6 மாத குழந்தையின் வாயிலும் டேப் ஒட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில்,”ரேஷ்மியின் கணவர் சொல்லித்தான் சோனல் தனது கருவைக் கலைத்தார் என்று கருதி அதற்குப் பழிவாங்கும் நோக்கில் குழந்தையையும் நிகில் கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு நிகில் தனது வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து பழைய டெல்லிக்குச் சென்றார். அங்கிருந்து பரேலிக்குச் சென்று அங்கிருந்து ஹல்வாவுக்குச் சென்று தனது சகோதரிக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தார்.
அவர் கொலை செய்துவிட்டுத் தப்பிச்செல்லும்போது யாரும் தன்னைப் பின் தொடரக்கூடாது என்பதற்காக மொபைல் போனையும் சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து மடக்கிப் பிடித்து கைது செய்தோம்” என்றார். கைது செய்யப்பட்ட நிகிலிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.