
மதுரை: “கோவை குண்டுவெடிப்பு, அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பண்ணா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் இந்து இயக்க பிரமுகர்களை படுகொலை செய்த வழக்கிலும், பாஜக தேசியத் தலைவர் அத்வானி சென்ற பாதையில் குண்டு வைத்த வழக்கிலும் கைது செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்த மூவரையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் என்றும், சிறையில் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், அவர்களை பார்க்க குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை என்றும், அவர்களை சிறையில் சந்திப்பேன் என கூறியுள்ளார்.