
மும்பையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் இருக்கும் கேண்டீனில் வழங்கப்பட்ட சாப்பாடு தரமானதாக இல்லை என்று கூறி கேண்டீன் உரிமையாளரை சிவசேனா எம்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கேண்டீன் உரிமையாளர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கேண்டீன் லைசென்ஸை ரத்து செய்துள்ளது. ஆனால் எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சஞ்சய் கெய்க்வாட்டும் தனது செயலுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை. இந்நிலையில் தற்போது அதே எம்.எல்.ஏ. மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். இம்முறை தென்னிந்தியர்களை விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”கேண்டீன் உரிமையாளர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். அப்படி இருக்கும் போது தென்னிந்திய கேண்டீன் உரிமையாளர் மீது எதிர்க்கட்சிகளுக்கு ஏன் திடீரென அனுதாபம் வரவேண்டும். தென்னிந்தியர்கள் மகாராஷ்டிராவை நாசமாக்கவில்லையா?
மகாராஷ்டிராவில் டான்ஸ் பார்கள், லேபீஸ் பார்கள் அதிகரிக்க தென்னிந்தியர்கள் காரணமாகும். அவர்கள் இளைஞர்களைக் கறைபடியச் செய்துவிட்டனர். மகாராஷ்டிரா கலாசாரத்தைக் கெடுத்துவிட்டனர்.
எம்.எல்.ஏ.விடுதி கேண்டீனுக்கு எதிராக இதற்கு முன்பு 5 ஆண்டில் 400 முறை புகார் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கேண்டீன் உரிமையாளர் தாக்கப்பட்டது சிறிய சம்பவம். எனக்கும் சட்டம் தெரியும். சபாநாயகரைச் சந்தித்து எனது விளக்கத்தைத் தெரிவித்துவிட்டேன். முதல்வர் மற்றும் துணை முதல்வரையும் சந்தித்து விளக்கம் அளிப்பேன். நான் செய்தது தவறு என்று அவர்கள் நினைத்தால் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சைகள்
எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் இதற்கு முன்பு பல முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதே போன்று ஒரு முறை புலியை வேட்டையாடி அதன் பல்லை மாலையாக்கி எனது கழுத்தில் அணிந்து கொண்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதோடு கடந்த ஜனவரி மாதம், வாக்காளர்களைக் கொச்சைப்படுத்திப் பேசியிருந்தார். ஆனால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. என்பதால் அவர் மீது இது வரை அவரது கருத்துக்களுக்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.