
விழுப்புரம்: “சிறுபான்மை மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினரை அரண் போல் பாதுகாக்கப் பட்டனர்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் இன்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களிடையே பேசியது: “ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். நன்மைகள் கிடையாது. ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள திமுக ஆட்சி திட்டமிடாததால் விழுப்புரம் நகரம் தண்ணீரில் மிதந்தது. தானே புயல் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் புயல் வேகத்தில் அதிமுக அரசு செயல்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து அதிகாலை 2.45 மணிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டதால், கரையோரம் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.