
பிரதமர் நரேந்திர மோடி ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நரேந்திர மோடிக்கு 74 வயதாகிறது. எனவே 75 வயதில் ஓய்வு பெறக்கூடும் என்று கடந்த தேர்தல் முடிவுகளின் போதே பேசப்பட்டது. ஆனால் அப்படி நரேந்திர மோடி ஓய்வு பெறப்போவதில்லை என்று பா.ஜ.க கூறிக்கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி ஓய்வு பெற்ற பிறகு மத்திய அமைச்சர் அமித் ஷா அந்த இடத்திற்கு கொண்டு வரப்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து வந்திருந்த கட்சியின் மகளிரணியினர் மற்றும் கூட்டுறவுத்துறையை சேர்ந்த பெண்கள் முன்னிலையில் பேசும்போது, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து அமித் ஷா தெரிவித்துள்ளார். 60 வயதாகும் அமித் ஷா எப்போது ஓய்வு பெறுவார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
அவர் பெண்கள் மத்தியில் பேசுகையில், ”அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும், வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்தில் எனது நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளேன். ரசாயான உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் கோதுமையால் புற்றுநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்னைகள் வருகிறது. இது குறித்து இதற்கு முன்பு நாம் தெரியாமல் இருந்தோம். ரசாயான உரங்கள் கலக்காத உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. இயற்கை விவசாயம் நோய்களை கட்டுப்படுத்துவதோடு மகசூலையும் அதிகரிக்கிறது.
நானும் எனது தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். இதில் 1.5 மடங்கு அதிகமாக மகசூல் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்தில் அதிகப்படியான சுற்றுச்சூழல் நன்மைகள் இருக்கிறது. அதிக மழை பெய்யும் போது, பொதுவாக பண்ணையில் இருந்து தண்ணீர் வெளியேறும். ஆனால் இயற்கை விவசாயத்தில், ஒரு துளி கூட தண்ணீர் வெளியேறாது – அது மண்ணுக்குள் சென்றுவிடும். ஏனென்றால் இயற்கை விவசாயம் நீர்நிலைகளை உருவாக்குகிறது. அதிகப்படியான உரங்களைப் பயன்படுத்துவது அந்த நீர்நிலைகளை அழித்துவிட்டது. விவசாயத்தில் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
கூட்டுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாளில்..!
மண்புழுக்கள் இயற்கை உரங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் செயற்கை உரங்கள் அவற்றைக் கொன்றுவிட்டன. இந்த உயிரினங்கள் இயற்கையில் யூரியா தொழிற்சாலைகளாக செயல்பட்டு, டிஏபி (டையம்மோனியம் பாஸ்பேட்) மற்றும் எம்பிகே (மோனோபொட்டாசியம் பாஸ்பேட்) போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன” என்று தெரிவித்தார்.
தனது மத்திய அமைச்சர் பதவி குறித்து அமித் ஷா பேசுகையில், ”நான் நாட்டின் உள்துறை அமைச்சரானபோது, எனக்கு மிக முக்கியமான துறை கிடைத்திருப்பதாக எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் கூட்டுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாளில், எனக்கு இன்னும் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டதாக உணர்ந்தேன் – அது நாட்டின் விவசாயிகள், ஏழைகள், கிராமங்கள் மற்றும் விலங்குகளுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது” என்று தெரிவித்தார்.
அமித் ஷா கல்லூரியில் படித்தபோதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பில் உறுப்பினராக இருந்தார். அதோடு 1987-ம் ஆண்டு பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொண்ட அமித் ஷா குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது அவரது நம்பிக்கைக்குறியவராக மாறினார். இதனால் அமித் ஷா எப்போதும் நரேந்திர மோடிக்கு நிழலாக இருந்து அனைத்தையும் செய்து வருகிறார்.