
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் எப்படி தொடங்கலாம், கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது சதி செயல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.
அறநிலையத்துறையின் சட்டத்தின்படி..!
இதுகுறித்து இன்று (ஜூலை 10) செய்தியாளர்களைச் சந்திப்பில் பேசியிருக்கும் அமைச்சர் சேகர் பாபு, “பசிப் பிணி, அறிவுப் பிணி, உடல்பிணி உள்ளிட்ட பிணிகளை போக்குவதுதான் இறைவனுடைய அம்சம். அந்த அடிப்படையில் அன்னதானப்பணி, கல்விப்பணி, மருத்துவப்பணி ஆகியவற்றை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. திமுக தலைமையிலான அரசு இம்மூன்றையும் மிகச்சிறப்பாக செய்து வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்தின்படி கோயில்களின் நிதியிலிருந்து கல்விநிறுவனங்கள் தொடங்கலாம். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. அந்த அடிப்படையில் திமுக அரசு அறநிலையத்துறை சார்பில் கல்வி நிறுவனங்களை தொடங்கியிருக்கிறது.
திமுக ஆட்சியில் அரசு சார்பில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கியிருக்கிறோம். 19 திருக்கோயில்களில் மருத்துவமனை தொடங்கியிருக்கிறோம்.
சோழர், வீரராஜேந்திரன் காலத்தில்கூட கோயில்களில் கல்விச் சாலைகள், மருத்துவச் சாலைகள் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தக் காலங்களில் கல்விக் கற்றுக் கொடுத்த சமணப் பள்ளிகளிலிருந்துதான் ‘பள்ளி’ என்ற சொல்லே வந்தது. இப்படி கோவில்களில், சமணப் பள்ளிகளில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது, மருத்துவச் சாலைகள் இயங்கியிருக்கின்றன.

நாங்கள் செய்வது சதிச் செயல் என்றால்…
பக்தவச்சலம், காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
நாங்கள் செய்வது சதிச் செயல் என்றால், அவர்களும் சதிச் செயல்தான் செய்தார்களா? அதிமுக தலைவர்களையே இபிஎஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதில் இதிலிருந்து தெரிகிறது. பாஜக என்னும் மலைப்பாம்பு அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது. சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” என்று பேசியிருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.