
மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் போக்குவரத்து காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ்வரன். இவர் சாலை விதிகள் குறித்து பொது மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகம் அருகே டிராக்டரில் ஏற்றி சென்ற ஜல்லி கற்கள் சரிந்து சாலை முழுவதும் பரவி கிடந்தது.
இதனால் அந்த வழியாகசென்ற வாகனங்கள் திணறிய படி செல்ல, இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் சிலர் ஜல்லி கற்களில் சிக்கி சரிந்து விழுந்தனர்.
இந்நேரத்தில் அந்த வழியாக சென்ற பலரும் கண்டும் காணாமல் கடந்து போயினர். அப்போது அவ்வழியே சென்ற போக்குவரத்து சார்பு ஆய்வாளர் விக்னேஷ்வரன், இதனை கண்டுள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய அவர் சாலையில் கொட்டி கிடந்த ஜல்லி கற்களை தனிநபராக நின்று துடைப்பானை கொண்டு அகற்றி சாலையை சரி செய்தார்.

கடுமையான தூசிக்கு மத்தியல் தனி ஒருவராக நின்று சாலையில் கொட்டி கிடந்த ஜல்லிகற்களை அகற்றிய விக்னேஷ்வரனின் செயலை சிலர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பரப்பினர். இந்த வீடியோ வைரலான நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் சார்பு ஆய்வாளர் விக்னேஷ்வரனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.