
பா.ஜ.க தலைமையிலான அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும், தொழில், ஜவுளி துறை அமைச்சருமாக இருந்தவர் ஸ்மிருதி இரானி. அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து ஊடகங்களில் விவாதப்பொருளாகுவார். 2019-ம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தியையே தோற்கடித்து மத்திய அமைச்சரான அவர், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதே அமேதி தொகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
அதற்குப்பிறகு ஸ்மிருதி இரானி அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில், பிரபல இந்தி சீரியல் இயக்குநரான ஏக்தா கபூரின் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்ற தொடரின் இரண்டாம் சீசன் உருவாகிறது. இந்தத் தொடரின் முதல் சீசன் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது. இதில் ஸ்மிருதி இரானி நடித்த துளசி விராணி கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டிருக்கிறது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த சீரியலின் இரண்டாம் பாடம் தொடங்கவிருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத் திரையில் தோன்றவிருக்கிறார். இந்த சீரியலின் முதல் சீசனில் நடித்த அனுபவம் குறித்து முன்னர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு ஸ்மிருது இரானி பேட்டியளித்திருக்கிறார். அதில், “ஒப்பந்தத்தின்படி, எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.1200-1300 சம்பளம் கொடுப்பார்கள். அந்த நேரத்தில், நான் மெக்டொனால்டுகளில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்தேன்.

அங்கு எனக்கு மாதம் ரூ.1800 சம்பளம் கிடைத்தது. எனவே, ஒரு நாளைக்கு ரூ.1200 பெறுவது மிகவும் நல்ல விஷயமாக இருந்தது.” எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் 150 எபிசோடுகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில், ஒரு எபிசோடில் நடிப்பதற்காக ஸ்மிருதி இரானிக்கு ரூ.14 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…