
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி சமீப காலமாகத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. மராத்தி பிரச்னையில் வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அடுத்த சில மாதங்களில் மாநகராட்சிக்குத் தேர்தல் வர இருக்கிறது. ஏற்கனவே மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து படுதோல்வியைச் சந்தித்து வரும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அகோலா மற்றும் நாண்டெட் நெடுஞ்சாலையில் வாசிம் மாவட்டத்தில் உள்ள தொண்ட்காவ் டோல்கேட்டை நவநிர்மாண் சேனாவினர் அடித்து உடைத்தனர். இரும்பு கம்பிகளைக் கொண்டு அடித்து உதைத்தனர்.
இரண்டு பேர் டோல்கேட் கண்ணாடியை இரும்பு கம்பியால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.
இது குறித்து நவநிர்மாண் சேனா மாவட்டத் தலைவர் ராஜு பாட்டீல் கூறுகையில், ”சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டிற்குத் தயாராகவில்லை. ஆனால் டோல்கேட் செயல்படத் தொடங்கிவிட்டது. எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை.
இதற்காகப் பல முறை மனுக்கொடுத்திருக்கிறோம். அருகில் உள்ள கிராமத்திற்குச் சாலை கூட இன்னும் போட்டு முடியவில்லை. ஆனால் அதற்குள் நுழைவு வரி வசூலிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அவர்கள் வருமானத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உள்ளூர் மக்கள் கோபத்தில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நவநிர்மாண் சேனாவினரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம், ‘நான் ஏன் மராத்தி கற்றுக்கொள்ளவேண்டும்’ என்று தொழிலதிபர் சுஷில் கேடியா கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து மும்பை ஒர்லியில் உள்ள சுஷில் அலுவலகத்தை நவநிர்மாண் சேனாவினர் அடித்து உடைத்தனர். இதற்கு முன்பும் பல முறை நவநிர்மாண் சேனாவினர் டோல்கேட்டை அடித்துச் சேதப்படுத்தி இருக்கின்றனர்.