
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் இருதரப்பையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 31, 2025-க்குள் வீட்டை காலிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் கொடுத்தக் காலக்கெடுவைக் கடந்தும் வழக்கறிஞர் மோகன்தாஸ் வீட்டை காலிசெய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்த நிலையில், வீட்டு உரிமையாளர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருக்கும் வழக்கறிஞர் தொடர்ந்து வீட்டு உரிமையாளருக்கு தொல்லைக் கொடுத்து வந்ததும், வீட்டு உரிமையாளர் மீது ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், 1989-ம் ஆண்டு பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகளைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதி கடுமையானக் கோபத்துடன், “வாடகை வீட்டில் இவ்வளவு காலமாக இருந்துக்கொண்டு வீட்டு உரிமையாளரைக் கொடுமை படுத்தியது, நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தது உள்ளிட்டக் காரணங்களால் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்படாது. சிறையிலிருந்து மேல் முறையீடு செய்துகொள்ளலாம்.

இத்தகைய கடுமையான தவறான நடத்தையை, இந்த நீதிமன்றம் உறுதியாக எதிர்க்கவில்லை என்றால், அத்தகைய நேர்மையற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் சாதகமானதற்கு சமமாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும், அவரது நடத்தை ஒரு வழக்கறிஞருக்குத் தகுதியற்றது என்பதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்” என உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.