• July 9, 2025
  • NewsEditor
  • 0

திருப்பரங்குன்றம் கோயிலில் வருகின்ற திங்கட்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

திருப்பரங்குன்றம்

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, ” திராவிட மாடல் ஆட்சியில் முகூர்த்த தேதிகள் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடக்காத நாள்களே இல்லை என்கிற பெருமை இந்த ஆட்சிக்கு உள்ளது. நேற்று வரை 114 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்திருக்கிறது. இது வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய செயல்.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகின்ற 14 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த பணிகளை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மூர்த்தியும், மாவட்டச் செயலாளர் மணிமாறனும் திருக்கோயில் ராஜா பட்டரும், அறங்காவலர் குழு உறுப்பினர்களும் மாவட்ட நிர்வாகத்தினரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.

திருச்செந்தூரில் எப்படி சின்ன அசம்பாவிதம் கூட இல்லாமல், ஒரு வழக்கு கூட பதிவு செய்யாமல் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தபோதும், காவல்துறை, வருவாய்துறை, நகராட்சி, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை அனைத்தும் ஒன்றிணைந்து நிர்வாகத் திறமையால் இந்த ஆட்சியின் மயில் கல்லாக மாற்றிக் காட்டியது போல் 14ஆம் தேதி நடைபெறும் திருப்பரங்குன்றம் குடமுழுக்கிலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து, தேவையான ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடத்தி காட்டுவோம்.

அமைச்சர் சேகர் பாபு

இந்த குடமுழுக்கை பொறுத்த அளவில் மொத்தமாக 2 கோடி 37 லட்சம் ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்திற்கு பக்தர்கள் தாங்கும் விடுதி, திருமண மண்டபம் என பல்வேறு ஏற்பாடுகள் ரூ.22 கோடியில் செய்யப்பட்டு இருந்தாலும், குடமுழுக்கிற்காகவும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 1700 பேரை மேலே தரிசனம் செய்ய அனுமதித்தும், அனைவரும் தரிசிக்கும் வகையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு காட்சிகள் ஒளிபரப்பப்படும்.

கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகளும், அவசர காலங்களில் பயன்படுத்த தீயணைப்புத் துறை வாகனங்கள், குப்பைகள் சேராத வண்ணம் மாநகராட்சிப் பணியாளர்களும், 3000 காவலர்களுடன் பாதுகாப்பு பணியும், அவசர உதவிக்கு தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பக்தர்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதியும், உள்ளூர் விடுமுறை அளிக்கவும் மக்கள கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆன்மீக மக்கள் கேட்பதையெல்லாம் மறுக்காமல் தருகின்ற முதல்வர், அதையும் அளிப்பார், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

திருச்செந்தூரைப்போல் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற குடமுழக்கு விழாவாக நடைபெறும். 75 யாக குண்டங்கள் வளர்கப்படுகின்றன. அனைத்து குண்டங்களிலும் தமிழ் ஓதுவார்கள் முக்கியமாக பெண் ஓதுவார்களை வைத்து தமிழ் ஒலிக்க செய்கிறோம்.

எட்டு காலம் பூஜைகள் நடைபெறுகிறது. 200 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் பங்கேற்க உள்ளனர். முருகப்பெருமானுக்கு மகிழ்ச்சியான சூழல்களை உருவாக்கி தருவோம். இது தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி, திருச்செந்தூரிலும் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு காணப்பட்டது, பழனியிலும் இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம்

உலக முருக பக்தர்கள் மாநாடு இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது, சுவாமி மலையில் மின் தூக்கி இந்த ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. திருத்தணிக்கு 98 கோடி ரூபாய் செலவில் பணிகள் இந்த ஆட்சியில் தான் நடைபெறுகிறது.

117 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 1032 கோடி செலவில் இந்த ஆட்சியில் தான் 872 பணிகள் நடைபெறுகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு திருப்பணிகள் நிறைவேற்றுகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெறுகிறது. பெருந்திட்ட வரைவு என்கிற சொல்லை முதன்முறையாக இந்த ஆட்சியில்தான் முதல்வர் உருவாக்கினார். 19 கோயில்களில் பெருந்திட்ட வரைவுப் பணி நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் அரோகரா, சிவ சிவ கோஷம் ஒலிக்கின்றது. ஆராதனைகள், தேவாரம் திருவாசகம் பன்னிரு முறைகள் பாடுகின்ற ஆன்மிக ஆட்சியாக, பக்தி மனம் கமழ்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிறார்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *